×

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை முழுமையாக கைவிடவில்லை: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

பெங்களூரு: விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் கடந்த 7ம் தேதி தரையிறங்கியது. ஆனால், கடைசி நேரத்தில் அதனுடன் தகவல் தொடர்பு துண்டானது. நிலவின் தரையில் விக்ரம் லேண்டர் மெதுவாக தரையிறங்குவதற்கு பதிலாக வேகமாக மோதி தரையிறங்கியதால், அது சேதமடைந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது. இந்நிலையில், நாசாவின் எல்ஆர்ஓசி ஆர்பிட்டர் கடந்த 17ம் தேதி நிலவின் தென் துருவ பகுதியை கடந்து சென்றது.

அப்போது, விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சிம்பெலியஸ் என் மற்றும் மன்சினஸ் சி என்ற இரண்டு முகடுகளுக்கு இடையேயான சமவெளிப் பகுதியை மிகவும் அதிநவீன முறையில் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த படங்களை ஆராய்ந்ததில் விக்ரம் லேண்டர் தரையில் பலமாக மோதி தரையிறங்கியது உறுதியாகி உள்ளது. ஆனாலும், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய துல்லியமான இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எல்ஆர்ஓசி ஆர்பிட்டர் அடுத்த மாதம் 14ம் தேதி மீண்டும் தென்துருவ பகுதியை கடந்து செல்லும்.

அப்போது வெளிச்சம் நன்றாக இருக்கும் என்பதால், விக்ரம் லேண்டரை படம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு குறித்து ஆராய தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தற்போது அதற்கான விஷயங்களை ஆராய்ந்து வருகிறது. இந்தக் குழு ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 21ஆம் தேதி முதல் நிலவின் தென் துருவ பகுதியில் இரவு தொடங்கியது.

ஆகவே இரவு நேரத்தில் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்; தற்போது நிலவின் தென் துருவ பகுதியில் இரவு இருப்பதால் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாது. ஆகவே மீண்டும் அந்தப் பகுதியில் பகல் வந்தவுடன் நாங்கள் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிப்போம் என கூறியுள்ளார்.


Tags : scientists ,ISRO ,Vikram Lander , Vikram Lander, quit trying, ISRO
× RELATED கேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் : விஞ்ஞானிகள் ஆய்வு