×

பெயரளவிற்கு நடந்த குடிமராமத்து பணியால் 5 வருடத்திற்கு பின் நிரம்பிய கண்மாய் உடைந்து வீணான தண்ணீர்: வத்திராயிருப்பு அருகே விவசாயிகள் கவலை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே அரைகுறையாக நடந்த குடிமராமத்து பணியால் கண்மாய் உடைந்து தண்ணீர் வீணானது. 5 வருடத்திற்கு பின் நிரம்பிய தண்ணீர் வீணாக வெளியேறியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி பகுதியில் நேற்றுமுன் தினம் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்றும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் அருவி, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. கனமழையால் வத்திராயிருப்பு அருகே அனுப்பங்குளம் கண்மாய் நிரம்பியது. நீர்க்கசிவு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் கரையில் மண் நிரப்பி சரிசெய்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கண்காய் கரை திடீரென உடைந்து தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி ஊஞ்சான்குளம், செங்குளம் கண்மாய்களுக்கு சென்றது. இன்று காலை கண்மாய்க்கு சென்ற மக்கள், விவசாயிகள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வத்திராயிருப்பு அருகே அனுப்பங்குளம் கண்மாய் மூலம் 375 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் 5 வருடத்திற்கு பின் கண்மாய் நிரம்பியது. இதனால் விவசாய பணிகளை துவக்க தயாராக இருந்தோம். ஆனால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியுள்ளது.

இதற்கு காரணம், ரூ.40 லட்சத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி அரை குறையாக நடந்ததுதான். இப்பணியை முன்கூட்டியே துவக்கி தரமாக முடித்திருந்தால் உடைப்பு ஏற்பட்டிருக்காது. உடைப்பு ஏற்பட்டதால் கரையையொட்டியுள்ள வயலில் மண் நிரம்பியுள்ளது. இதனை அகற்ற பெரும் செலவாகும். உடைப்பை சரிசெய்த பின் மீண்டும் கண்மாய்க்கு தண்ணீர் வந்தால்தான் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும்’ என்றார்.
கண்மாயை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் காளிசரண் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர்.

Tags : Citizenship work, blindfolded, dressed up
× RELATED அரசு கலை மற்றும் அறிவியல்...