×

பாகன் இறந்ததால் சோர்வடைந்த காஞ்சி கோயில் யானைகள் திருச்சியில் பராமரிப்பு: சகஜ நிலை திரும்பியதாக வன அதிகாரிகள் தகவல்

மண்ணச்சநல்லூர்: திருச்சி பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்ட காஞ்சிபுரம் கோயில் யானைகள் பாகன் இறந்ததால் சோர்வடைந்திருந்த நிலையில், தற்போது சகஜ நிலைக்கு திரும்பியதாக வனத்துறை அதிகாரிகள் ெதரிவித்தனர். தொடர்ந்து மருத்துவக்குழுவினர் யானைகளை  தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய 3 யானைகள் கோயில் நிர்வாகம் சார்பில் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால், யானை பாகன் இறந்து விட்டதால் 3 யானைகளையும் முறையாக பராமரிக்க ஆட்கள் இல்லாததால் அவை உடல்நலம் குன்றின. பின்னர் அந்த 3 யானைகளையும் பராமரிக்கும் பணி தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குரும்பரத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

ஆனால், தனியார் தொண்டு நிறுவனத்தினர் வனத்துறையினரின் உரிய அனுமதியில்லாமல் யானைகளை பராமரித்து வருவதாகவும், யானைகளின் பாதுகாப்பு கருதி அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வனவிலங்குகள் ஆர்வலர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, காஞ்சீபுரம் கோயில் யானைகளை திருச்சியில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்பேரில், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள்  3 யானைகளையும்  திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வந்தனர். ஏற்கனவே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை ஒன்று இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனுடன் சேர்த்து இந்த 3 யானைகளையும் வனத்துறையினர் அங்கு பராமரித்து வருகின்றனர்.

யானைகள் அழைத்து வரப்பட்டவுடன் கால்நடை மருத்துவ குழுவினர் யானைகளை பரிசோதித்தனர். சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர் தயாசேகரும் யானைகளை பரிசோதித்தார். தொடர்ந்து யானைகளை மருத்துவக்குழு மூலம் கண்காணித்து, அதுகுறித்த அறிக்கையை கோர்ட்டில் வனத்துறையினர் தாக்கல் செய்ய உள்ளனர். மேலும், யானைகளுடன் நன்றாக பழகக்கூடிய பாகன்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் யானைகளை நடைபயிற்சி அழைத்து செல்லுதல், குளிக்க வைத்தல், சத்தான உணவு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர வனச்சரகர் முருகேசன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் யானைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்நாள் சற்று சோர்வடைந்து இருந்த யானைகள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பி விட்டன, அவை தண்ணீரில் உற்சாகமாக குளியல் போட்டு அங்குமிங்கும் சுற்றிதிரிந்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : temple elephants ,Kanchi ,death ,Pagan ,Trichy ,Kanchipuram Temple , Maintenance at Kanchi Temple Elephants, Trichy
× RELATED தியாகராஜர் கண்ட தெய்வீக தரிசனம்!