×

செங்கம் அருகே போதிய பஸ் இல்லாததால் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நாகபாடி கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் மாணவர்கள் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி உள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கல்லூரிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் பஸ் படிக்கட்டு மற்றும் ஏணியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் தினமும் பயணம் செய்கின்றனர்.

இதை பார்க்கும் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் மனவேதனையில் உள்ளனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chengam , Sengum, students on bus stairs, dangerous journey
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை