×

‘பி.வி.சிந்துவை கல்யாணம் பண்ணி வைங்க...’ 75 வயது முதியவர் மீண்டும் அடம்

சாயல்குடி: பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்துவை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், எனக்கு 16 வயது என சான்றிதழ் தர வேண்டும் என 75 வயது முதியவர், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மீண்டும் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே விரதக்குளத்தை சேர்ந்தவர் மலைச்சாமி(75). விவசாயி. இவர் கடந்த ஓராண்டாக தனக்கு 16 வயது என பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டுமென, வாரந்தோறும் கலெக்டர் அலுவலக குறை தீர் கூட்டத்தில் தொடர்ந்து மனு அளித்து வந்தார்.

கடந்த செப்.16ம் தேதி பேட்மிண்டன் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை, தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த மலைச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் மனு வழங்கி விட்டு, ‘‘எனது சொத்து பிரச்னையை தீர்த்து வைங்க... உங்களை எனது தாயாக, சகோதரியாக நினைக்கிறேன். நீங்கள்தான் எனக்கு பி.வி.சிந்துவை எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று கூறி மிரள வைத்தார்.

பின்னர் மலைச்சாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கல்வி, விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளது. எனக்கு தற்போது 16 வயதுதான் நடக்கிறது. எனக்கு பொருத்தமானவர் பி.வி.சிந்துதான். அதனால் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவரை எங்கிருந்தாலும் விடப்போவதில்லை. எப்படியும் திருமணம் செய்து கொள்வேன்’’ என்றார். குறைதீர்க் கூட்டத்திற்கு வாரந்தோறும் வந்து தொல்லை கொடுத்து வரும் முதியவர் மலைச்சாமியை கடுமையாக எச்சரித்து, அவருக்கு மனநல ஆலோசனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று கலெக்டர் அலுவலகம் வந்திருந்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : PV Sindhu , PV Sindhu, Kalyana, aged 75 years
× RELATED ஆஸி. ஓபன் பேட்மின்டன்: காலிறுதியில் சிந்து