தொடர் விடுமுறை வருவதால் ஆயுதபூஜைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தொடர் விடுமுறை வருவதால் ஆயுதபூஜைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான 2வது ஆய்வுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் கூறியதாவது, தீபாவளிக்கு சென்னையில் இருந்து 4,265 சிறப்பு பேருந்துகள், திருப்பூரிலிருந்து 1,165 பேருந்துகள், கோவையில் இருந்து 920 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பண்டிகை முடிந்து பொதுமக்கள் திரும்பி வருவதற்காக சென்னைக்கு 4,627 பேருந்துகளும், திருச்சியில் இருந்து 5,70 பேருந்துகளும், கோவைக்கு 925 பேருந்துகளும் பெங்களூருவுக்கு 221 பேருந்துகளையும் இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. வரும் 5,6,7,8ம் தேதி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வரவிருப்பதால் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு ஆயுத பூஜைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து 1,695 பேருந்துகளும், திருப்பூரில் இருந்து 280 பேருந்துகளும், கோவையில் இருந்து 717 பேருந்துகளும், பெங்களூருவில் இருந்து 245 பேருந்துகளும் இயக்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை மேற்கொண்டுள்ளது. ஆயுதபூஜை முடிந்து பொதுமக்கள் திரும்பி வருவதற்காக சென்னைக்கு 1,505 பேருந்துகள், திருப்பூருக்கு 226, கோவைக்கு 490, பெங்களூருவுக்கு 237 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இப்பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்ய தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் ஐஆர்டி தரமணி ஆகிய 4 இடங்களில் வரும் 3ம் தேதி முதல் சிறப்பு கவுன்டர்கள் செயல்படும். தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 மையமும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் 1 மையமும் என மொத்தம் 30 மையங்கள் அமைக்கப்படும். சென்னை கோயம்பேடு சிறப்பு முன்பதிவு மையங்கள் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை செயல்படும். மேலும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>