×

குடியாத்தம் அருகே பரபரப்பு: தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி

குடியாத்தம்: குடியாத்தம் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரயிலை கவிழ்க்க மர்ம ஆசாமிகள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்ஜின் டிரைவர்கள் கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம், சென்னைக்கு தினமும் குடியாத்தம் வழியாக ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட பல்வேறு பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் குடியாத்தம் அருகே முப்பது கண் பாலம் மீது பாசஞ்சர் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள தண்டவாளத்தில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பாறாங்கல் ஒன்று இருப்பதை இன்ஜின் டிரைவர் ஏகாம்பரம் கவனித்துள்ளார். இதையடுத்து, ரயிலை மெதுவாக இயக்கி நிறுத்தினார். பின்னர், இன்ஜின் டிரைவர்கள் இருவரும் இறங்கி அந்த பாறாங்கல்லை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு ரயில் அங்கிருந்து 10 நிமிடம் தாமதாக புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தை அறிந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க மர்ம ஆசாமிகள் யாரேனும் சதி செய்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்ெபக்டர் சேகர், ரயில்வே தனிப்பிரிவு போலீஸ்காரர் சுதர்சன், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதியை இன்ஜின் டிரைவர்கள் கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags : railway ,jolarpettai ,Gudiyattam , Gudiyattam, train, jolarpettai
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...