×

ஆரணி அடுத்த சேவூரில் பரபரப்பு: கள்ளத்தொடர்பால் பிறந்ததாக பச்சிளம் பெண் குழந்தை கொன்று புதைப்பு

ஆரணி: ஆரணி அடுத்த சேவூரில் கள்ளத்தொடர்பால் பிறந்ததாக பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பகுதியை சேரந்தவர்  குமார், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சோலையம்மாள்(35), இவருக்கு கடந்த 14ம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சோலையம்மாள் 16ம் தேதி யாருக்கும் தெரியாமல் குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து மருத்துவர்கள் ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சோலையம்மாள் மற்றும் பச்சிளம் குழந்தையை தேடி வந்தனர். மேலும்,  சேவூரில் உள்ள சோலையம்மாளின் மகள் லட்சுமி, தங்கை மலர் மற்றும் மாமனார், மாமியாரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சோலையம்மாள் அவருடைய கணவர் குமாருடன் சென்னையில் இருப்பதாகவும், கடந்த 16ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் பச்சிளம் பெண் குழந்தை இறந்து விட்டதாகவும் போனில் தெரிவித்ததாக கூறினர். தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் குமாரின் அண்ணன் பாபு(49) என்பவருக்கும் சோலையம்மாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி சேவூரில் உள்ள விஏஓ அலுவலகத்தில் சோலையம்மாள் மற்றும் கள்ளக்காதலன் பாபு இருவரும் தஞ்சமடைந்தனர். அப்போது, எங்களுக்குள் ஏற்பட்ட கள்ளத்தொடர்பில் கடந்த 14ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, வீட்டில் தெரிந்தால் குடும்பத்தில் பிரச்னை வரும் என்பதற்காக நாங்கள் இருவரும் சேர்ந்து பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்து ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதியில் புதைத்து விட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, விஏஓ ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், எஸ்ஐ பாலாஜி மற்றும் போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் குழந்தையை கொன்று புதைத்தது தெரிந்தது.

பின்னர், போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து,  நேற்று போலீசார் இருவரையும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, திருவண்ணாமலை சட்டம் சார்ந்த மருத்துவ பேராசிரியர் கமலக்கண்ணன், தாசில்தார் (பொறுப்பு) பாலாஜி ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் சடலத்தை குமாரிடம் ஒப்படைத்து சேவூர் பகுதியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், சோலையம்மாள், பாபு இருவரையும் நேற்று ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் சோலையம்மாளையும், ஆண்கள் சிறையில் பாபுவையும் அடைத்தனர்.

Tags : Arani ,Saran , Arani, girl child
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...