×

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து பகவத்கீதையை நீக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினர் கைது!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து பகவத்கீதையை நீக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தடையை மீறி அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக மாணவரயினருக்கு ஆதரவாக திராவிட கழகத்தின் மாணவரணியினரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டமானது தடையை மீறி நடைபெற்றதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் கிண்டி-வேளச்சேரி சாலையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக, 2019 ஜூன் மாதம் ஏஐசிடிஇ வெளியிட்ட வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்த மாணவர்களுக்கு பாடத்திட்டம் சாராத 32 பாடங்களில் 3 பாடங்களை விருப்பப்பாடமாக தேர்வு செய்து 3வது, 4வது, 5வது செமஸ்டரில் படிக்க வேண்டும் என கூறியிருந்தது. சமுதாயத்தில் தொழில்நுட்பகல்வி, மதிப்புகள் மற்றும் தர்மம், தர்மமும் சிறந்த வாழ்க்கை முறையும், புகைப்படம், வீடியோ எடுத்து ஆவணப்படுத்துதல் என 32 பாடங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி, ஸ்கூல் ஆப் ஆர்க்டெக்சன் அன்ட் பிளானிங், அழகப்பா காலேஜ் ஆப் இன்ஜினியரிங், குரோம்பேட்டையிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 4 கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பாடப்பிரிவு வாரியாக விருப்ப பாடங்களை தேர்வு செய்தனர். அதில் பி.டெக்(தகவல் தொழில்நுட்பம்) மாணவர்கள் மொத்தமுள்ள 12 பாடங்களில் தத்துவவியல் பாடத்தை தேர்வு செய்தனர். தத்துவியல் பாடத்தின் 5வது யூனிட்டில் ‘‘அறிவே ஆற்றல்’’ என்ற தலைப்பில் நம்முடைய ஆற்றலை உணர்வது தொடர்பாக கீதையில் கூறப்பட்டுள்ளவை, மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அர்ஜூனனுக்கு கிருஷ்ணரின் உபதேசங்கள் ஆகியவை கொண்ட பகவத்கீதையை பாடமாக உள்ளது. இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம் திடீரென்று பகவத்கீதையை பாடமாக கொண்டு வந்ததற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது எனவும், மதச்சார்பற்ற நாட்டில் திட்டமிட்டு பாடத்திட்டத்தில் மத விஷயங்களை சேர்ப்பதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : DMK ,Chennai ,removal ,student , Anna University, syllabus, Bhagavad Gita, protests, student, arrest
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி