×

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வீரமரணமடைந்த வீரர்களுக்கு செலுத்திய உண்மையான அஞ்சலி: அமித்ஷா பேச்சு

அகமதாபாத்: ‘‘காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கியதன் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வீரமரணமடைந்த வீரர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். சிஆர்பிஎப் துணை ராணுவப் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப் படையின் (ஆர்ஏஎப்) 27வது ஆண்டு விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் வஸ்திராலில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பல வீரர்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். கடந்த 70 ஆண்டாக நீடித்த அந்த சூழலை சரி செய்யவோ, அதில் கவனம் செலுத்தவோ கூட யாருக்கும் தைரியம் வரவில்லை.

ஆனால் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏவை நீக்கியதன் மூலம் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.  இனி காஷ்மீர் வளர்ச்சியின் பாதையில் பயணிக்கும் என அம்மாநில மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன். இனி காஷ்மீரில் அமைதியை குலைக்க முயற்சிப்பவர்களை நம் வீரர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றார். நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான சிஆர்பிஎப்பில் 3.25 லட்சம் வீரர்கள் உள்ளனர். இதன் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படையானது, வன்முறை மற்றும் கலவரங்களை அடக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.  இப்படையில் சிறப்பாக செயலாற்றிய 20 வீரர்களுக்கு அமித்ஷா பதக்கங்களை வழங்கி னார்.

Tags : Kashmir Amit Shah ,war heroes ,Kashmir , Special status of Kashmir, Amit Shah
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!