×

லாலு மனைவி, மகள் என்னை தாக்கினார்கள்: மருமகள் குற்றச்சாட்டு

பாட்னா:  ‘‘பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மனைவியும், மகளும் என்னை தாக்கினார்கள்’’ என அவரது மருமகள் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருக்கும் அதே கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவின் மகள் ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 6 மாதத்திலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தேஜ் பிரதாப் யாதவ் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். எனினும் அவரது மனைவி கணவரின் வீட்டிலேயே தங்கி இருந்தார். தேஜ் பிரதாப் மனைவி ஏற்கனவே மாமியார் ரப்ரி தேவி மற்றும் லாலுவின் மகள் மிசா பாரதி ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் மாமியார் மற்றும் கணவரின் தங்கை மீது மீண்டும் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் முன் பத்திரிகையாளர்களை அழைத்து  ஐஸ்வர்யா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தாலும் இன்னும் விவாகரத்து வழங்கப்படவில்லை. அவருடைய மனைவியாக இந்த வீட்டிலேயே வசித்து வருகிறேன். எனக்கு இந்த வீட்டில் அனைத்து உரிமைகளும் உள்ளது. ஆனால் எனது மாமியார் ரப்ரி தேவி, கணவரின் தங்கை மிசா பாரதி ஆகியோர் அடித்து துன்புறுத்துகின்றனர். வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறு என்னை கட்டாயப்படுத்துகிறார்கள். ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் இருந்து எனக்கு சரியாக சாப்பாடு தருவதில்லை.

நேற்று முதல் முற்றிலும் சாப்பாடு தரவில்லை. சமையலறையை பூட்டி சாவியை அவர்களே வைத்துள்ளனர். இதனால் என்னால் சாப்பிட முடியவில்லை. சமையலறை சாவி எங்கே இருக்கிறது என்று கேட்டபோது என்னை தாக்கினார்கள். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. மிசா பாரதியின் உதவியாளர் எனது செல்போனை பறிக்க முயன்றார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து என்னை மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பிரமிளா கூறுகையில், “ஐஸ்வர்யா ராய்க்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கிறோம். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர நடவடிக்கை எடுப்போம்” என்றார்.  லாலு குடும்பத்தினரிடம் இது பற்றி கேட்டபோது, “திருமணமாகி வந்ததில் இருந்து ஐஸ்வர்யா ராய் சிறிய விஷயத்தை கூட பெரிய பிரச்னையாக்க முயற்சிக்கிறார்” என்றனர்.

Tags : Lalu , Lalu is his wife, daughter and daughter-in-law
× RELATED லாலு மருமகனுக்கு சீட் ஒதுக்கிய...