×

சட்ட மாணவிக்கு ஆதரவாக யாத்திரை உ.பி.யில் காங்கிரஸ் தலைவர்கள் கைது: உபி. காங்கிரஸ் யாத்திரை

ஷாஜஹான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் சட்ட மாணவிக்கு ஆதரவாக நியாய யாத்திரை நடத்த இருந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் ஜிதின் பிரசாதா, கவுசர் மிஸ்ரா மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உத்தரப் பிரதேசத்தில் பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்தாவிற்கு எதிராக சட்ட மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு சின்மயானந்தா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் பாஜ தலைவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக சட்ட மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சட்ட மாணவிக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் “நியாய யாத்திரை” என்ற பெயரில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஷாஜஹான்பூர் முதல் லக்னோ வரை 180 கி.மீ. தூரத்துக்கு 5 நாள் பேரணி நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க இருந்தனர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரணியை தடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் திரிபாதி கூறுகையில், “காங்கிரஸ் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை. நகரம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், காங்கிரஸ் அலுவலகம் முன் கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுமார் 80 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்” என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுசல் மிஸ்ரா, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு மற்றும் கட்சியின் மூத்த தலைவர் தீரஜ் குஜ்ஜார் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாத்திரையில் கலந்து கொண்ட தொண்டர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கட்சி அலுவலகம் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சாலைகளில் தடுப்புக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பிரசாதா தனது டிவிட்டர் பதிவில், “மாணவியின் அவலநிலையை வெளிகொணர விரும்பியதற்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளேன். பாஜ அரசுக்கு மனசாட்சி இல்லை’’ என்று கூறியுள்ளார்.

ஆணவப்போக்கில் உ.பி. அரசு பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு:
காங்கிரஸ் தலைவர்கள் நடத்த இருந்த பேரணியை உத்தரப் பிரதேச அரசு தடுத்து நிறுத்தி, காங்கிரஸ் தலைவர்களை கைது செய்துள்ளது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், “அதிகாரத்தின் ஆணவத்தால் ஜனநாயகத்தை பாஜ அரசு அழிக்கின்றது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை பாதுகாப்பதற்காகவும் மற்றும் ஷாஜஹான்பூரின் மகளுக்கு நீதி கேட்பவர்களின் குரலை ஒடுக்குவதற்காகவும் அரசு எதை வேண்டுமானாலும் செய்யும்.  உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்குகிறது. தங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று அறிந்தவுடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

உபி. காங்கிரஸ் யாத்திரை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், “பாஜ அரசானது மகள்கள் மீது அட்டூழியம் செய்பவர்களுக்கு துணையாக நிற்கிறது. இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தொண்டர்களை கைது  செய்கின்றது. போராட்ட பாதையில் கட்சி தொண்டர்கள் வீதிகளில் நின்று ஒடுக்குமுறையை எதிர்கொள்வார்கள்” என கூறியுள்ளார்.

Tags : leaders ,Congress Pilgrimage ,Congress ,Pilgrimage ,UP , Law student, pilgrims, congress, leaders, arrest, UP
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...