×

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 8 கேரள வாலிபர்கள் அமெரிக்க விமான தாக்குதலில் பலி: உறுதி செய்தது என்ஐஏ

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 8 பேர், அமெரிக்க வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டதை தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது.கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 23 பேர் ஆப்கானிஸ்தான் சென்று, அங்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியாயின. இது குறித்து முதலில் காசர்கோடு போலீசார் விசாரணை நடத்தினர். இதன்பின் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஏற்றுக் கொண்டது. என்ஐஏ நடத்திய விசாரணையில் காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரஷித் அப்துல்லா என்பவர் தலைமையில்தான் இந்த 23 பேரும் ஆப்கானிஸ்தான் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் இவர்களில் 8 பேர் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டதாக, அப்துல் ரஷித் அப்துல்லா கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ‘டெலிகிராம்’ ஆப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை தேசிய புலனாய்வு அமைப்பு இதுவரை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் காசர்கோடு மாவட்டம் படன்னா பகுதியை சேர்ந்த முகமது முர்ஷித், ஹபீசுதீன், ஷிஹாஸ், அஜ்மல் மற்றும் திருக்கரிப்பூரை சேர்ந்த முகமது மர்வான், முகமது மன்ஷாத், பாலக்காட்டை சேர்ந்தவர்களான பாஸ்டின் மற்றும் ஷிபி ஆகிய 8 பேர், ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு நங்கர்ஹார் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியானதாக என்ஐஏ உறுதி செய்துள்ளது. இந்த தகவலை என்ஐஏ கேரள போலீசிடம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இவர்களை அழைத்து சென்ற அப்துல் ரஷித் அப்துல்லாவும் அமெரிக்க தாக்குதலில் இறந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதை என்ஐஏ இதுவரை உறுதி செய்யவில்லை.

Tags : fighters ,Kerala ,air strike ,US ,Afghanistan , Afghanistan, IS militant movement, killed, NIA
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...