×

திருப்பதியில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்: முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. முதல்வர் ஜெகன்மோகன் அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று மாலை தங்க கொடிமரத்தில் நேற்று மாலை 5.23 மணி முதல் 6 மணிக்குள் மீன லக்கினத்தில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக மகா விஷ்ணுவின் வாகனமான கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி, ஆகியோருடன் நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

பிரமோற்சவத்தையொட்டி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது குடும்பத்தினருடன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று வெங்கடேஸ்வர சுவாமிக்கு சமர்ப்பித்தார். பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்க உத்தரவு:
ஆந்திராவில், இந்து அறநிலையத்துறை மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இனி இந்துக்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் என்று ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தினர் பணிபுரிந்து வந்தால் அவர்களை வேறு துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் புதிய பணியிடங்களை நிரப்பும்போது இந்துக்கள் மட்டுமே தகுதியானவர்கள் என நேற்று ஆந்திரமாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : Tirupathi, Pramotsavam, Chief Minister Jaganmohan
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்