தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றியதால் காவல் நிலையம் அருகே தலையாரி வெட்டிக்கொலை

தேவகோட்டை: தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான பிரச்னையில், காவல்நிலையம் அருகே தலையாரி வெட்டிக் கொல்லப்பட்டார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (45). அப்பகுதியில் தலையாரியாக பணியாற்றி வந்தார். திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.  திருவேகம்பத்தூரில் நேற்று காலை வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது வீடும் இடிக்கப்பட்டது. இதற்கு தலையாரி  ராதாகிருஷ்ணன்தான் காரணம் என கணேசன் ஆத்திரமடைந்தார். நேற்று மாலை திருவேகம்பத்தூர் காவல்நிலையம் அருகே ராதாகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கணேசன், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில்  சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். தகவலறிந்த திருவேகம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தலையாரி வெட்டிக் கொல்லப்பட்ட  சம்பவம் வருவாய் துறை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Thalaiyari Vettikolai ,Police Station Police Station , Devakottai, Police Station, Thalayari, Vettikolai
× RELATED பொள்ளாச்சி சம்பவம்போல நாகையில்...