×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: மேலும் இரண்டு புரோக்கர்கள் சிக்குகின்றனர்: இர்பான் தந்தை முகமது சபியிடம் நடந்த விசாரணையில் அம்பலம்

தேனி: நீட் தேர்வில் ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் 2 புரோக்கர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் உதித்சூர்யா சேர்ந்த வழக்கில், அடுத்தடுத்து மாணவர்கள் பிரவீன், ராகுல், மாணவி அபிராமி ஆகியோர் தந்தையருடன் சிக்கினர்.  நேற்று முன்தினம் இரவு அபிராமியும், அவரது தந்தை மாதவனும் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டுமென்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாணவன் இர்பானின் தந்தை டாக்டர் முகமது சபி, நேற்று அதிகாலை 1 மணியளவில், தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  அவரிடம் சிபிசிஐடி தென்மண்டல எஸ்பி விஜயகுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினார்.

விசாரணை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: புரோக்கர்கள் வேதாச்சலம், முகமது ரஷீத் ஆகியோரை, உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு டாக்டர் முகமது சபி தான்  அறிமுகம் செய்து  வைத்துள்ளார். அவர் மூலம் மாணவர்கள் பிரவீன், ராகுல், மாணவி அபிராமியின் பெற்றோருக்கும் புரோக்கர் வேதாச்சலம் அறிமுகமாகி உள்ளார். இவர்கள் அத்தனை பேரும் சென்னையில் திடீரென மூடப்பட்ட  பிரிஸ்ட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை ஒன்றாக படித்தவர்கள். இப்படித்தான் அத்தனை பேருக்கும் அறிமுகம் கிடைத்துள்ளது. மாணவர்களின் தந்தையிடம் புரோக்கர் வேதாச்சலம் பணம் வாங்கி, திருவனந்தபுரத்தை சேர்ந்த முகமது ரஷீத்திடம் கொடுத்துள்ளார்.  தற்போது அவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர்  திருவனந்தபுரத்தை சேர்ந்த புரோக்கர் ஜார்ஜ் ஜோசப்  மூலம் ஆள் மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதி இந்த மாணவர்களை மருத்துவக்கல்லூரிகளில் சேர்த்துள்ளனர்.

மாணவி அபிராமி மட்டும் புரோக்கர்களிடம்  பணம் கொடுத்திருந்தாலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ஆள் மாறாட்டம் செய்யாமல் தனது ஒரிஜனல் சான்றுகளை கொடுத்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதனால் மாணவி அபிராமி, அவரது தந்தை  மாதவன் ஆகியோர் 2 நாள் போலீஸ் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல் ஆகியோரும், அவர்களின் தந்தையரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு குழப்பத்திற்கும் காரணமான மாணவன் இர்பானின் தந்தை டாக்டர்  முகமதுசபி, நேற்று கொடுத்த தகவல்கள் அடிப்படையில் புரோக்கர்கள் வேதாச்சலம், முகமதுரஷீத் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.சிபிசிஐடி தென்மண்டல எஸ்பி விஜயகுமார் கூறுகையில், ‘‘மாணவன் இர்பான் மொரீசியஸ் தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இர்பானின் தந்தை டாக்டர்  முகமதுசபி இரண்டு புரோக்கர்களை அடையாளம் காட்டி உள்ளார்.

அவர்கள் குறித்த சில தவகல்களையும் கொடுத்துள்ளார். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.  இதற்கிடையில் இர்பான் படித்த தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் னிவாசராஜை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளோம். அவரிடம் விசாரித்த பின்னரே டாக்டரை சிறையில் அடைப்பது  குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை போலீஸ் காவலில் இருப்பார்’’ என்றார். ஜாமீன் கோரி மனு: தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன், பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிட் ஆகியோர் ஜாமீன் கோரி, நேற்று  மனுத்தாக்கல் செய்தனர். சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.

புரோக்கர்களுக்கு தந்த 1.20 கோடி
விசாரணை குறித்து போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘இதுவரை ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர மாணவர்கள் தலா 20 லட்சம்  பணம் கொடுத்ததாக நினைத்திருந்தோம். தற்போது  டாக்டர் முகமது சபியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்பு,  ஒவ்வொரு மாணவரும் தலா 24 லட்சம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. ஐந்து மாணவர்களும் சேர்த்து ₹1.20 கோடி புரோக்கருக்கு  கொடுத்துள்ளனர்.  இந்த மோசடி பற்றி அறிந்த யாரோ ஒருவர், கூடுதலாக 2 கோடி கேட்டு மிரட்டியதால் பிரச்னை உருவாகி விவரங்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன. இதுபற்றி அரசுக்கு தகவல் கொடுத்துள்ளோம்.  புரோக்கர்கள் சிக்கினால் மேலும் பல உண்மைகள் வெளியாகும்’’ என்றனர்

Tags : Mohammed Sabi ,brokers ,Irfan ,investigation ,impeachment , Need selection, impersonation, Irfan, Mohammed
× RELATED சமாஜ்வாடி எம்எல்ஏ வீட்டில் ஈடி சோதனை