×

மலைப்பகுதியில் கனமழை கொட்டியதால் சதுரகிரி சென்ற பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு: ஆண்டாள் கோயிலில் மழைநீர் புகுந்தது

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், சதுரகிரி சுந்தரம்காலிங்கம் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் மழைநீர் புகுந்தது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆனந்தவள்ளியம்மன் சன்னதியில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதற்காக நேற்று  முன்தினம் முதல் வரும் 8ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 20 பேர் உள்ளிட்ட 50 பேர், சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடக்கும்  நவராத்திரி விழாவுக்கு சென்றனர். விடிய, விடிய மழை கொட்டியதால் ஓடைப்பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால், நவராத்திரி விழாவுக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்க  அனுமதிக்கப்படவில்லை.

ஆண்டாள் கோயிலில் மழைநீர் புகுந்தது: திருவில்லிபுத்தூரில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை இரவு 8 மணி வரை தொடர்ந்தது. பின் நேற்று அதிகாலை 1 மணியளவில் பலத்த இடி,  மின்னலுடன் தொடங்கிய மழை, காலை 7 மணி வரை தொடர்ந்தது. நகரில் 128 மிமீ மழை பதிவானது. இதனால் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதி மற்றும் கோயில் பிரகாரத்திலும்,  மழைநீர் புகுந்து தேங்கியது.

Tags : Devotees ,hills ,Chataragiri ,country , Hilltop, Heavy Rain, Chaturagiri, Andal Temple
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...