×

செஞ்சி அருகே பயங்கரம்: வேனில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பலி

செஞ்சி:  புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை பகுதிகளுக்கு சப்ளை செய்ய பட்டாசுகளை வேனில் எடுத்து சென்ற போது ஏற்பட்ட வெடி விபத்தில் டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 3 பேர் உடல் சிதறி  பரிதாபமாக பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
 புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் இருந்து நேற்று காலை பட்டாசுகளை ஏற்றிய மினி வேன் திருவண்ணாமலை, செஞ்சி பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை  செய்வதற்காக புறப்பட்டு சென்றது.  இந்த வேனை புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த  இளவரசன்(22) ஓட்டிச் சென்றார். கடலூர் பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த சத்தியசாயிபாபா(53) கிளீனராக  உடன் சென்றார்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, வேனின் பின்பகுதியில், இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த டிரைவரும் கிளீனரும் வேனை நிறுத்தி  பார்த்தனர். அதிக உராய்வின் காரணமாக பட்டாசு பெட்டிகளில் இருந்து புகை வந்துள்ளது.

இதனால், அருகில் டீக்கடை வைத்திருந்த பாஷா என்பவரிடம் தண்ணீர் ஊற்றும்படி கூறினர். அவர் தண்ணீர் ஊற்றிய  நேரத்தில் திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வண்டி அருகே நின்றிருந்த டிரைவர், கிளீனர் மற்றும் டீக்கடைக்காரர் பாஷா ஆகியோர் கை, கால், தலை, துண்டாகி சிதறி  பலியாகினர். வேனும் உருத்தெரியாமல் சின்னாபின்னமானது. பட்டாசு வெடித்து சிதறியதில் அருகில் இருந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான 5 கடைகள் கொண்ட கட்டிடம் இடிந்து சேதமடைந்தது.  அருகில் இருந்த கூரை வீடு, சிமென்ட் ஓடு போட்ட வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட வீடுகளிலும் பட்டாசுகள் மற்றும் மினி வேனின் இரும்பு உதிரி பாகங்கள் விழுந்து சேதமடைந்தன. மேலும் பைக்கில் வந்த  நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்த திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி கலை என்கிற சிவசங்கரன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களில் 8  பேர் செஞ்சி அரசு மருத்துவமனையிலும், 8 பேர் புதுச்சேரி  அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சம்பவம் தொடர்பாக புதுவை முருங்கப் பாக்கத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் வீராசாமி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு:
வெடி விபத்து நடந்த போது, செஞ்சி நோக்கி செல்வதற்காக நங்கிலிகொண்டான் பேருந்து நிறுத்தத்திற்கு அரசு டவுன் பஸ் வந்தது. அதில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். வேனில் பட்டாசுகள் இருப்பது  தெரியவரவே உடனடியாக பஸ்சை அங்கிருந்து எடுத்துவிட்டனர். பஸ் சற்று தூரம் சென்ற நிலையில் பட்டாசு வேன் பயங்கரமாக வெடித்தது. இதில் பஸ் பின்புற கண்ணாடி சேதமடைந்து ஒருவர் காயம்  அடைந்தார். வேன் அருகிலேயே பஸ் நின்றிருந்தால் அதுவும் வெடித்துச் சிதறி உயிர்பலி அதிகரித்திருக்கும். அதிர்ஷ்டவசமாக பஸ்சை எடுத்துவிட்டதால் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags : Chengi ,Terror , Red, van, crackers, 3 kills
× RELATED வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு...