×

7 தமிழர் விடுதலையில் 13 மாதமாக முடிெவடுக்கவில்லை பஞ்சாபிகளுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா? கவர்னருக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்ட அம்மாநில காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங் தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு காரில் ஏற முயன்ற போது,  பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தில்வார் சிங் என்பவர் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பல்வந்த் சிங் கைது செய்யப்பட்டார். 2012ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் பாதல் கொடுத்த கருணை மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டது. அதனடிப்படையில், 7 தமிழர்களை விடுதலை  செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்து இன்றுடன் 387 நாட்கள் ஆகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பஞ்சாப் மாநில அரசு அளித்த பரிந்துரை மீது 14 நாட்களில் மத்திய அரசு முடிவு எடுக்கிறது. தமிழர்கள் விடுதலை விஷயத்தில் 13 மாதங்களாகியும் இன்று வரை ஆளுனர் முடிவு எடுக்கவில்லை என்றால் அது எந்த  வகையில் நியாயம்? இது கடுமையான இனப்பாகுபாடு அல்லவா?.

ஏற்கனவே கருணை அடிப்படையில் விடுதலை செய்வதில் நடிகர் சஞ்சய்தத்துக்கு காட்டப்பட்ட சலுகை 7 தமிழர்களுக்கும் மறுக்கப்பட்டது. இப்போது பஞ்சாபியர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு ஒரு நீதி  என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் மகாத்மா  காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளில் விடுதலை செய்வதற்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.

Tags : Tamils ,Liberation of Tamils Not Complete ,governor ,Ramadas , 7 Tamils Liberation, Tamils, Governor, Ramadas
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு