×

ஐ.டி ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனை மீண்டும் உறுதி: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி சிறுசேரி அருகே உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2014 பிப்ரவரி 13ம் தேதி பணிக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததால்  கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், காணாமல் போன உமா மகேஸ்வரி, சுமார் 10 நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 22ம் தேதி சிறுசேரி சிப்காட் வளாகத்தின் அருகேயுள்ள முட்புதரில் பிணமாக மீட்கப்பட்டார். பாலியல் பலாத்காரம்  செய்து உமா மகேஸ்வரியை கொலை செய்தது விசாரணையில் உறுதியானது. இதுதொடர்பான வழக்கில், வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும் வழக்கை விசாரித்த செங்கல்பட்டு அமர்வு  மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

பின்னர் குற்றவாளிகள் 3 பேரும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின்  உத்தரவையே மீண்டும் உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் உயிரிழந்த உமா மகேஸ்வரியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டை 4 மாதத்துக்குள் தர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட  எஸ்.பி.க்கும் அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.    இதை தொடர்ந்து, குற்றவாளிகள் மூன்று பேரின் தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நேற்று உச்ச  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், “இந்த விவகாரத்தில் தீர விசாரிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால்  உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ எனவும் வாதிடப்பட்டது.

 இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “ஐடி பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை தீவிர விசாரணை நடத்திய பின்னர்தான் ஒரு  இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளன. அதனால் அதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது’’ என தெரிவித்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் மேற்கண்ட மூன்று பேரின் ஆயுள் தண்டனை மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.


Tags : Uma Maheshwari ,convicts ,Uma Maheshwari of Supreme Court ,Supreme Court , IT employee Uma Maheshwari, murder case, guilty, life sentence
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்