×

மது அருந்தும் சிறுவர்கள்: சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சென்னை: அளவுக்கு அதிகமான மதுபோதையால் தமிழகத்தில் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், சில சிறுவர்கள் மது அருந்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதுகுறித்து அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் புதிய குடிநோயாளிகள் அதிகம் உருவாகும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக மாறியுள்ளது. இதுகுறித்து கடந்த 2010-17ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில், மது அருந்துவோரின் எண்ணிக்கை  38 சதவீதம் அதிகரித்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வளர்ந்து வரும் நாகரிக மாற்றத்தின் காரணத்தினாலும், திரைப்படங்களில் வரும் காட்சிகளின் தாக்கத்தினாலும் மது அருந்துவதை பொழுதுபோக்கான ஒன்றாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  பள்ளி செல்லும் மாணவர்கள் கூட இன்று குடிக்கு அடிமையாகிவிட்டனர்.

மேலும் அரசு ஆங்காங்கு டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதேபோல் மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில், தற்போது பெரும்பாலான மக்கள் வாழ்ந்து  வருகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சிக்கல், பணிச்சுமை, இன்னும் பல பிரச்னைகளின் தாக்கமும் மதுபழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு வழிவகை செய்கிறது.  சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்களில் இருந்து வெளியில் வரும் இளைஞர்கள் நேராக டாஸ்மாக் கடைகளுக்கே செல்கின்றனர். அதன்பிறகே வீட்டுக்கு திரும்புகின்றனர். குறிப்பாக  ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கிறது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் கால்சட்டை அணிந்த சிறுவர்கள் சிலர் மதுகுடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.

அவர்களுக்கு மூன்று இளைஞர்கள் மதுவை கிளாஸில் ஊற்றிக் கொடுக்கிறார்கள். பழக்கம் உள்ளவர்கள் போல் சிறுவர்கள் மதுவை குடிக்கும் வீடியோவை பார்க்கும், அடுத்த தலைமுறை குறித்த நன்மை  விரும்பிகளுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் இந்தவீடியோ மதுபாட்டில்களில் கூறப்பட்டுள்ளதுபோல், குடி ‘குடி’யைக்கெடுக்கும் என்பவை நிரூபணம் செய்யும் வகையில் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட வீடியோவில் சிறுவர்கள் மதுஅருந்த  கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 


Tags : Alcohol, children, social media
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...