×

தெருக்களில் கழிவுநீர் தேக்கம், குப்பை குவியல் சுகாதார கேட்டில் தவிக்கும் செம்பாக்கம் மக்கள் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தாம்பரம்: செம்பாக்கம் நகராட்சியில் துப்புரவு பணி சரவர மேற்கொள்ளப்படாததால் தெருக்களில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார கேட்டில் மக்கள் தவிக்கின்றனர். தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட அனுமன் நகர், அன்னை தெரசா தெரு மற்றும் திருமலை நகர், 7வது தெரு ஆகிய பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெருக்களிலேயே தேங்கி நிற்கின்றது. அதுமட்டுமின்றி இப்பகுதியில் நகராட்சி சார்பில் சரிவர துப்புரவு பணி செய்யாததால், ஆங்காங்கே குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. தற்போது, மழைக்காலம் தொடங்கியுள்ளதால், குப்பை மற்றும் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக செம்பாக்கம் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நகராட்சி நிர்வாகம் சரிவர துப்புரவு பணி செய்யாததால் தெருக்களில் குப்பை குவிந்து காணப்படுகிறது. முறையான வடிகால் வசதி இல்லாததால் வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி வருகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுகின்றனர். இந்நிலையில், கடந்த 23ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மாநில திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி செம்பாக்கம் நகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தபோது, அவர் வரும் பகுதிகளில் மட்டும் அவசர அவசரமாக குப்பையை அகற்றி, சாலை முழுவதும் குளோரின் பவுடர் தூவி சுத்தமாக வைத்திருப்பதாக அதிகாரிகள் நாடகமாடினர்.

ஆனால் மற்ற இடங்களில் ஆங்காங்கே குப்பை குவிந்து தான் இருந்தது. இதனை அகற்றவில்லை. இதுகுறித்து நகராட்சி ஆணையர் வசந்தியை தொடர்புகொண்டு முறையிட்டபோது, ‘‘குப்பையை எப்போது எடுக்கவேண்டும், எப்படி எடுக்க வேண்டும், என எங்களுக்கு தெரியும். எங்களுக்கு நீங்கள் உத்தரவிடக் கூடாது,’’ என ஆவேசமாக பேசி இணைப்பை துண்டித்துவிட்டார். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், குப்பையை தினமும் அகற்றவும் உத்தரவிட வேண்டும்,’’ என்றனர்.


Tags : streets , Sewerage people , streets, sewage stumps ,garbage piles
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...