×

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 17 லட்சம் தங்கம், லேப்டாப் பறிமுதல் : நக்கலாக பேசி சிக்கலில் மாட்டிய ஆசாமி

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 17 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் லேப்டாப்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். துபாயில் இருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த ஷாகுல் அமீது (45) என்பவர் துபாய்க்கு சுற்றுலா பயணிகள் விசாவில் சென்றுவிட்டு சென்னை திரும்பினார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ஷாகுல் அமீது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். அவரது உடமைகளை சோதனையிட்டபோது, உபயோகப்படுத்திய 10 லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு 1 லட்சம். சிகரெட், லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

அப்போது ஷாகுல்அமீது, ‘‘நான் கொண்டுவந்த பொருட்களை பறிமுதல் செய்துவிட்டீர்களே, என்னை வெளியில் விடுவீர்களா, அல்லது என்னையும் பறிமுதல் செய்வீர்களா’’ என அதிகாரிகளைப் பார்த்து நக்கலாக கேட்டுள்ளார். இதனால், அதிகாரிகளுக்கு அவர் மீது மேலும் சந்தேகம் வலுத்தது.
எனவே, அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று ஆடைகளை களைந்து சோதனை நடத்தினர். அப்போது, அவரது உள்ளாடையில் கருப்பு பெயின்ட் அடிக்கப்பட்ட 4 தங்க கட்டிகளையும், தங்க செயினையும் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மொத்த எடை 450 கிராம். அதன் சர்வதேச மதிப்பு 16 லட்சம். ஷாகுல் அமீதிடம் இருந்து தங்கக்கட்டிகள், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் என 17 லட்சம் மதிப்புடைய பொருட்களை பறிமுதல் செய்தனர். பிறகு அவரையும் கைது செய்தனர்.

Tags : Dubai , 17 lakh gold , laptop seized ,Dubai
× RELATED ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி