×

திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு வீடு, நிலம், உயில், திருமணம் ஆகியவற்றுக்கான பதிவுகள் மற்றும் வில்லங்க சான்று, பத்திர நகல் எடுத்தல் போன்ற பணிகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்போது, ஆன்லைன் மூலம் அனைத்து பதிவுகளும் நடைபெறுகிறது. பதிவு செய்பவர்கள் இதற்கான டோக்கன்களை பெற்று குறித்த நேரத்தில் வந்து பதிவுகளை செய்துகொள்ள வேண்டும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த அலுவலகத்தில் சார்-பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், அங்குள்ள உதவியாளர் அனைத்து பதிவுகளும் செய்கிறார். இதனால் அலுவலக பணிகள் தாமதமாக நடைபெறுகிறது. மேலும், அடிக்கடி நெட்வொர்க் பிரச்னையால் பணம் செலுத்தும் மெஷின் மற்றும் ஜெராக்ஸ் மெஷின் வேலை செய்வதில்லை. இதனால், இங்கு வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும் சார் பதிவாளர் இல்லாததால் உதவியாளர் இந்த பணியை செய்து வருகிறார். இவர், பதிவு குறைபாடுகள் குறித்து கேட்கும் பொதுமக்களுக்கு உரிய பதில் கூறுவதில்லை. பத்திரங்களை பதிவு செய்வதற்கு அரசு அறிவித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக பணம் கேட்கின்றனர். வெளியூர்களிலிருந்து காதல் ஜோடிகள் இங்கு வந்து திருமணம் செய்யும்போது பதிவுத்துறை விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. இதுபோன்ற திருமணங்களுக்கு கூடுதலாக இங்கு உள்ள அலுவலர்கள் பணம் வசூல் செய்கின்றனர்.

ஏற்கனவே இங்கு முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து, செய்யப்பட்ட சோதனையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் இங்கு பணியில் இருந்த ஒரு சிலர் பிடிபட்டு இடமாற்றம் மாற்றப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அதுபோன்ற முறைகேடுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
எனவே, சார் பதிவாளரை நியமிக்கும் வரை திருமணம் மற்றும் பத்திர பதிவுகளை பதிவுத்துறை தலைவர் நேரடியாக ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இடநெருக்கடி

காலடிப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் பல ஆண்டாக சிறிய அளவிலான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், நெரிசலில் பொதுமக்கள் தவிக்கின்றனர். மேலும் இந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பார்க்கிங் வசதி இல்லை. இதனால் சாலை ஓரத்திலேயே வாகனங்களை நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் இந்த வழியாக போக முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Tags : office Register ,Registrar ,Office , Additional fee ,registration of bonds ,Registrar's office
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...