×

முகத்துவார ஆற்றை சீரமைக்க கோரி மீனவர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

திருவொற்றியூர்: எண்ணூர், கத்திவாக்கத்தில் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுகுப்பம், முகத்துவார குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் எண்ணூர் முகத்துவார ஆற்றில் மீன், நண்டு, இறால் பிடிப்பது மட்டுமின்றி முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக முகத்துவார ஆறு தூர்ந்து காணப்படுகிறது. இதனால், மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் விதிமீறி  சுடுநீர் மற்றும் ரசாயன கழிவுகளை முகத்துவாரத்தில் விடுவதால் மீன் வளம், கடல் வளம் பாதிக்கப்படுகிறது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதையடுத்து முகத்துவாரத்தை ஆழப்படுத்தி இருபக்கமும் பாறைகள் அமைத்து படகுகள் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும், என மீனவர்கள் பல ஆண்டாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.  
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மீனவ கிராம நிர்வாகிகள் சுகுமார்,  ராஜேந்திரன், ராஜா, வாசு மற்றும் முன்னாள் கவுன்சிலர் குணசீலன் ஆகியோர் தலைமையில், ஒருநாள் கவன ஈர்ப்பு போராட்டம் தாழங்குப்பம் மார்க்கெட்  பகுதியில் நேற்று காலை நடந்தது. இதில், ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தின்போது, முகத்துவார ஆற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும், தூண்டில் வளைவு அமைக்க வேண்டும், கடலில் மீன்பிடிக்கும்போது உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், மீன்பிடி தொழிலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு, அனல் மின் நிலைய சுடுநீர் மற்றும் சாம்பல் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Fishermen ,estuary ,protest , Fishermen protest ,demanding rehabilitation ,estuary
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...