×

சென்னை வந்த பிரதமர் மோடி புகழாரம் தொன்மையான மொழி தமிழ்: 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம்: ஐஐடி விழாவில் பேச்சு

சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய  அவர், ‘உலகின் தொன்மையான மொழி தமிழ்’ என்று புகழாரம் சூட்டினார். மேலும் ஐஐடி விழாவில் பேசிய அவர், ‘5 லட்சம் கோடி டாலர்  பொருளாதார இலக்கை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது’ என்றும் தெரிவித்தார். ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா மற்றும் ‘ஹேக்கத்தான்’ என்ற தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி  நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 6.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு  சென்னை வந்தார். காலை 9.10 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வந்தார். பிரதமரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் உயர்  அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
 தொடர்ந்து பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவ், பாஜக மூத்த தலைவர்கள்  இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், இளைஞர்  அணி மாநில தலைவர் வினோஜ்.பி.செல்வம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், ஏ.என்.எஸ்.பிரசாத், மாவட்ட  தலைவர்கள் டால்பின் தர், தனஞ்ஜெயன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சென்று பிரதமர் மோடி, பாஜ தொண்டர்கள் மத்தியில்  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:  2019 பொதுத் தேர்தலுக்குப் பின் சென்னைக்கு முதல் முறையாக வருகிறேன். எனது அமெரிக்கப் பயணத்தில் இந்திய சமூகத்தினரிடையே நான்  தமிழில் உரையாற்றியபோது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று கூறியதை, அமெரிக்காவில் உள்ள அனைத்து ஊடகங்களும் விரிவாக  வெளியிட்டிருந்தன.
 எனது அமெரிக்கப் பயணத்தின்போது, மகத்தான எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை உலகம் பார்த்துக் கொண்டிருப்பதை  நான் உணர்ந்தேன். அந்த  எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியாவை மகத்தான தேசமாக்குவது மட்டும் நமது பொறுப்பாக இல்லாமல், உலக  சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதையும் கூட, நாம் ஏற்க வேண்டியுள்ளது.

இதனை மத்திய அரசால் மட்டும் செய்து விட முடியாது. 130 கோடி இந்தியர்களால் மட்டும்தான் இது முடியும்.  ஏழையோ, பணக்காரரோ, நகரவாசியோ,  கிராமவாசியோ, இளைஞரோ, முதியவரோ யாராக இருந்தாலும், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொருவரின் முயற்சியால் தான்  இதனை சாத்தியமாக்க முடியும்.  ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாட்டிலிருந்து விரட்ட வேண்டும். பிளாஸ்டிக்கை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும்  என்று நான் விரும்புவதாக சிலர் தவறுதலாகப் பொருள் கூறி வருகிறார்கள். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாட்டிலிருந்து ஒழிக்க  விரும்புவதாகத்தான் கூறினேன். இந்த வகை பிளாஸ்டிக்குகளை ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும். அவை பிற்காலத்தில் ஏராளமான  பிரச்னைகளை உருவாக்குகின்றன. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி நாம் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பாத யாத்திரைகள் மூலம்  காந்தியின் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் என்னை வரவேற்க வந்திருக்கும் உங்களுக்குநான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் ேமாடி இந்தியில் பேசியதை பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்ப்பு செய்தார். தொடர்ந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர்  மூலம் சென்னை ஐஐடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் முதலில் ‘ஹேக்கத்தான்’ என்ற தொழில்நுட்ப போட்டியில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.  பரிசுகளை வழங்கி அவர் பேசுகையில், ‘‘5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் இலக்கை நோக்கி நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது’’  என்றார்.  தொடர்ந்து சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதை முடித்து கொண்டு அவர் மீண்டும்  ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு 1.10 மணிக்கு வந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கவர்னர் பன்வாரிலால்  புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை வழியனுப்பி வைத்தனர். சரியாக 1.30 மணிக்கு அவர்  தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். எனது அமெரிக்கப் பயணத்தின்போது, மகத்தான எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை உலகம் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


Tags : Modi ,Chennai ,festival ,speech ,IIT ,IIT Festival , Modi, admiration,Prime Minister Modi,dollar econom, IIT Festival
× RELATED வடமாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை;...