×

பிச்சாவரம் சுற்றுலாதலத்துக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு: படகு சேவை நீட்டிக்க கோரிக்கை

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் எனும் சுரபுண்ணை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை இப்பகுதிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட்டம், கூட்டமாக பறவைகள் வரும். விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்துக்கு வருகின்றனர். படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பிச்சாவரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளையும், அடர்ந்த காடுகளில் ஆங்காங்கே தென்படும் பறவைகளையும் பார்த்து ரசித்து வருகின்றனர். பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மாலை 6 மணி வரை படகுகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் மாலை 4 மணிக்கே படகு சவாரியை நிறுத்த வேண்டும் என வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாலை 4 மணிக்கு பிறகு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் அதிக படகுகளை இயக்கவும், படகு சவாரி நேரத்தை மாலை 6 மணி வரை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவர எந்த திட்டமும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.

Tags : tourist arrivals ,Pichavaram , Pichavaram Tourism, Service, Extension Request
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...