×

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை மனு

சென்னை: தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்திய விமானப்படை தனிவிமானத்தில் பிரதமர் மோடி  காலை சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கு பிரதமருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி.,யின் 56வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில்; காவிரி மற்றும் அதன் பாசன வாய்க்கால்களை சீர்படுத்த நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு  ரூ.9,927 கோடி நிதி உதவி வழங்க வேண்டும். தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க வேண்டும்; கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும்  ரூ.7,825 கோடியை விடுவிக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம், நாமக்கல்லில் ,அரசு மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்க கோரிக்கை.

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீத செலவில் கூட்டாக செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்.  ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூரில் மத்திய அரசு நிதியுதவியுடன் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க வேண்டும். உதான் திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே மாலை நேர விமான சேவை தொடங்க வேண்டும். கோவையில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் இயக்க வேண்டும். கோவையில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும்.

சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்கவும் நிதி ஒதுக்க வேண்டும். கோவையில் இருந்து சவுதிக்கு நேரடி விமான சேவை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Tags : rivers ,Godavari ,Tamil Nadu Godavari ,Cauvery , You need water. Godavari - Cauvery, Prime Minister Modi, CM
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...