×

நீலகிரியில் மீண்டும் கனமழை: ஊட்டி- மஞ்சூர் சாலையில் மண் சரிவு... விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழையால் ஊட்டி- மஞ்சூர் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. கேத்தி பாலாடாவில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாயி நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 3ம் தேதி துவங்கிய மழை சுமார் 10 நாட்கள் கொட்டி தீர்த்தது. மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. ெதாடர்ந்து அவ்வப்போது ஊட்டி, கூடலூர். பந்தலூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிது. நேற்று இரவு 10 மணி முதல் மழை பெய்ய துவங்கியது.
இந்த மழை ஊட்டி மற்றும் குந்தா பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கேத்தி பாலாடா பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது.  இதனால் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் நீரில் மூழ்கின. இதே போல் முத்தோரை பாலாடா பகுதியில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

 மழையால் ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கைகாட்டி முதல் குந்தா வரையில் பல இடங்களில் ஏற்பட்ட மண் சரிவால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் இன்று காலை ஜேசிபி மூலம் சாலையில் கிடந்த மண் குவியல்களை அகற்றினர். சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து சீரானது.  
இதற்கிடையே ஊட்டி, குந்தா போன்ற பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.   

முகப்பு விளக்கை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர். மழையால் கடும் குளிர் நிலவுகிறது. தொடந்து சாரல் மழையும், அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இது போன்ற  மழை பெய்தால் ஊட்டி, குந்தா போன்ற பகுதிகளில் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  இந்த நிலையில் அனைத்து துறைகளும் உஷார் நிலையில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு; ஊட்டி 20, நடுவட்டம் 2, கல்லட்டி 4, கிளன்மார்கன் 6, குந்தா 107, அவலாஞ்சி 83, எமரால்டு 64, கெத்தை 36, குன்னூர் 31, பர்லியார் 16, கேத்தி 51, கோத்தகிரி 38, கோடநாடு 35, கூடலூர் 3, தேவாலா 3.

Tags : Nilgiris ,Soil collapse ,road ,Ooty-Manjur , Nilgiris, heavy rains, soil collapse
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...