×

ஏலகிரிமலையில் அதிகாரிகள் துணையுடன் 300 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் அதிகாரிகளின் துணையுடன் அரசுக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலங்களை தனிநபர்கள்  ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் நிலம் வாங்கி ரிசார்ட்டுகள்,  தங்கும் விடுதிகளை கட்டியுள்ளனர். அவ்வாறு நிலங்களாகவும் வீட்டுமனைகளாகவும் வாங்கும் நபர்கள் அருகாமையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து, தாங்கள் வாங்கும் பட்டா நிலத்துடன் இணைத்து கொள்கின்றனர். இதை வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லையாம். மேலும் நிலம் சம்பந்தமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் இங்குள்ள ஏலகிரி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அரசியல் பிரமுகர்கள் தலையீட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லையாம். ஏலகிரியில் மட்டும் அரசுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இதில் சுமார் 300 ஏக்கர் அளவிற்கு தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அத்தனாவூர் பகுதியில் உள்ள நீரோடையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆங்காங்கே செக்டேம் அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த செக் டேமில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கீழ் பகுதியில் உள்ள பொன்னேரி ஏரியில் கலக்கிறது. இதன் மூலம் பல்வேறு கிராம பகுதி விவசாயிகள் பயனடைந்து வந்தனர். தற்போது அத்தனாவூர் பகுதியில் உள்ள நீரோடை கால்வாயை அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட நபர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நிலம் வைத்துள்ள சில நபர்களை ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், போலீசார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அரசு நிலங்களை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஏலகிரிமலையில் அதிகாரிகள் துணையுடன் 300 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Elakirimalai ,Jolarpet ,Yelagiri Hills ,
× RELATED சிறுமியின் கை, கால்களை கட்டி பாலியல் தொந்தரவு: போக்சோவில் முதியவர் கைது