×

இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு : விக்கிரவாண்டியில் 23 பேர், நாங்குநேரியில் 36 பேர் போட்டி

சென்னை : விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. கடைசி நாளான இன்று அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியிலும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நாங்குநேரி தொகுதி

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன், இசக்கியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து தன்னுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசனிடம் வழங்கினார். அப்போது அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலக்ஷ்மி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நாங்குநேரி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணன் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், திமுக பணிக்குழு தலைவர் ஐ.பெரியசாமி, காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மற்றும் எம்.எல்.ஏக்கள் உடன் இருந்தனர்.

விக்கிரவாண்டி தொகுதி

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தன்னுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சிவி சண்முகம் உடன் இருந்தார். இதே போன்று விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியும் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் போன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
காமராஜ் நகர்
தொகுதி

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஜான்குமார், உப்புலத்தில் உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மன்சூரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல என்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரனும் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இடைத் தேர்தலை ஒட்டி கடைசி நாளில் விக்கிரவாண்டி தொகுதியில் 15 பேரும் நாங்குநேரி தொகுதியில் 27 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒட்டு மொத்தமாக விக்கிரவாண்டி தோகுதியில் இருந்து 23 பேரும் நாங்குநேரி தொகுதியில் 36 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போல புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை


இதையடுத்து, நாளை (அக்.1ம்தேதி) வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனு வாபஸ் வாங்க அக்டோபர் 3ம் தேதி மாலை 3 மணி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.



Tags : by-election ,election , Vikravandi, Nanguneri, Congress, candidates, AIADMK, DMK, Kamaraj Nagar
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...