×

மாலத்தீவு, லட்சத்தீவு, இந்திய பெருங்கடல் ஒட்டிய இடங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மைய இயக்குனர் புவியரசன் பேட்டி

சென்னை : மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தென் தமிழக கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று குறிப்பிட்ட புவியரசன், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புவியரசன் கூறினார். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் -13 செ.மீ., நீலகிரி குந்தா அணையில் -11 செ.மீ.,நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கையில்-7-9 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனிடையே இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கடந்த 102 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியாக 247.1 மி.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 48 சதவீதம் அதிகம். அத்துடன் 1901ம் ஆண்டிற்கு பிறகு அதிக அளவில் பதிவான 3வது மழை அளவும் இதுவே ஆகும்.


Tags : Fishermen ,sea ,Lakshadweep ,areas ,Indian Ocean ,Maldives ,Destinations , Climate, Maldives, Lakshadweep, GeoResan, Fishermen, Weather Center Director,
× RELATED காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக...