×

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊழியர்களின் அலட்சியத்தால் அகற்றப்படாத குப்பைகள்: பாதசாரிகள் கடும் அவதி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் மழைநீர் வடிகால் கழிவுகள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரி சாலை மற்றும் ஹடோ சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் கடந்த வாரம் பெய்த மழையின் போது குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடைப்புகளை சீரமைத்த மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சாக்குப்பைகளில் சேகரித்தனர். எனினும் நான்கு நாட்களுக்கு மேலாகியும் சாக்குப்பைகளில் உள்ள அந்த கழிவுகள் அகற்றப்படாமல் நடைபாதையிலேயே உள்ளன. மகளிர் கிறிஸ்துவ கல்லூரி, நல்லாயன் மேல்நிலைப் பள்ளி மத்திய அரசின் மண்டல எழுத்துப்பொருள் கிடங்கு, தென்மண்டல வானிலை ஆய்வு மையம், சாஸ்திரி பவன், எஸ்.பி.ஐ மண்டல தலைமை அலுவலகம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ள சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் பாதசாரிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.

இது குறித்து அங்குள்ள பாதசாரி ஒருவர் தெரிவித்ததாவது, மழை காலத்தில் ஏற்பட்ட கழிவுகள் அனைத்தும் மூட்டையாக கட்டி சாலையில் உள்ள நடைபாதையில் போடுபட்டுள்ளது என்றும், இந்த மூட்டைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இங்கேயே உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கழிவுகளிலிருந்து பெரும் துர்நாற்றம் வெளிப்படுவதாக அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து இந்த கழிவுகள் சாலையில் போடப்பட்டுள்ளதால் பாதசாரிகள் நடப்பதற்கு பெரும் சிரமமாக உள்ளதாகவும், இந்த கழிவுகளால் நோற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே மாநகராட்சி ஊழியர்கள் இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். நடைபாதை நடப்பதற்கே என்ற வாசகங்கள் சாலையில் வைத்திருந்தால் மட்டும் போதாது. நடப்பதற்கு ஏதுவான சூழலை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Tags : Chennai ,Nungambakkam , Chennai, Nungambakkam, employee, negligence, debris and pedestrians
× RELATED நடிகர் மன்சூர் அலிகான் கட்சி...