×

சென்னை செங்குன்றம் அருகே காவலரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

சென்னை: சென்னை செங்குன்றத்தில் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை செங்குன்றம் சோலைமான் நகரில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றக்கூடிய வெற்றிவேல் என்ற காவலர் அவரது நண்பருடன் நேற்று இரவு பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அகில பாரத இந்து அமைப்பு என்ற அமைப்பினை சேர்ந்த ராமநாதன் என்பவர் தன்னுடைய வாகனத்தில் அப்பகுதிக்கு வந்துள்ளார். இதை தொடர்ந்து இந்த கட்டுமானப்பணி நடைபெறும் இடமானது தன்னுடைய இடம் என்றும், இங்கு எதற்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றும் அவர் கோபமாக கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தாம் இந்த பகுதியை சேர்ந்தவர் என்றும், தாம் காவலர் என்றும் வெற்றிவேல் கூறியுள்ளார். இதில் ராமநாதன் என்ற நபர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தில் ராமநாதன் வெற்றிவேலை நோக்கி அவதூறாக பேசியதோடு மட்டுமின்றி தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து மூன்று முறை தரையை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த காவலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து செங்குன்றம் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று ராமநாதனை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் விசாரணையில் ராமநாதபுரம் என்ற நபர் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும் அவருக்கு அப்பகுதியில் வீடு ஒன்று உள்ளது எனவும், அதுமட்டுமல்லாது இவர் செம்மரக்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒரு நபர் என்றும் கூறப்படுகிறது.

அவரிடம் இருந்த துப்பாக்கி குறித்து விசாரணை நடத்தியபோது அவர் மணிப்பூரில் வாங்கியதாகவும் அங்கே அதற்கான உரிமம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான ஆவணங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வாறு உரிமம் இல்லையெனில் அதற்குரிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராமநாதன் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Tags : Chennai ,Gunman ,Cenkunram , Chennai, Red Cross, Guard, Gun, Person arrested
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...