×

விருதுநகரில் இரண்டு இடங்களில் திறந்த 6 மாதத்திலேயே மக்கள் மருந்தகங்களுக்கு ‘மூடுவிழா’

விருதுநகர்: விருதுநகரில்  திறந்த வேகத்தில் மூடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராத பிரதம  மந்திரியின் பாரத மக்கள் மருந்தகத்தை அரசு கட்டிடத்தில் திறந்து மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாட்டில்  உள்ள அனைத்து மக்களும் ஏதோ ஒரு நோயில் பாதிக்கப்பட்டு தினசரி மருந்து  உட்கொள்ள வேண்டிய அவலநிலையில் வாழ்ந்து வருகின்றனர். மருந்துகளின் விலைகள்  எல்லாம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வெளிச்சந்தையில்  சாமானிய ஏழை மக்களால் மருந்து, மாத்திரைகளை விலை கொடுத்து வாங்க  முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் உரிய மருந்து மாத்திரைகள் இருப்பில்  இல்லை. இந்நிலையில் நாடு முழுவதும் பிரதம மந்திரியின் பாரத மக்கள்  மருந்தகங்கள் 4 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டன.

விருதுநகரில் கீழக்கடை  தெருவில் தனியார் டிரஸ்ட் மூலம்  ஒரு மக்கள் மருந்தகமும், தனியார்  பாலிடெக்னிக் நிர்வாகம் மூலம் ஒரு மக்கள் மருந்தகமும் திறக்கப்பட்டன.  திறக்கப்பட்ட போது குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகள் மட்டும் விற்பனைக்கு  இருந்தன. மக்களுக்கு தேவையான மாத்திரைகளில் சிலவற்றை மட்டும் கொண்டு   திறக்கப்பட்ட மக்கள் மருந்தகம் 6 மாதங்களில் மூடப்பட்டது. மக்கள்  மருந்தகங்களில் உதாரணமாக சுகர் மாத்திரை வெளிச்சந்தைகளில் ரூ.20க்கு  விற்கப்படும் மாத்திரைகள், இங்கு ரூ.4.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அனைத்து நகரங்களிலும் செயல்படும் மக்கள் மருந்தகங்கள் விருதுநகரில் மட்டும் மூடிக்கிடப்பது வேதனை அளிக்கிறது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் குமார்  கூறுகையில், பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகங்கள் இரண்டு  திறக்கப்பட்டும், ஒன்று கூட மக்களுக்கு பயன் அளிக்கவில்லை. திறக்கப்பட்டு 6  மாதங்கள் இயங்கிய நிலையில் மூடப்பட்டு கிடக்கிறது. மக்கள் பயன்படும்  வகையில் அரசு கட்டிடத்தில் தொண்டுள்ளம் கொண்ட நிறுவனங்கள், அமைப்புகள்,  கூட்டுறவு அமைப்புகள் மூலம் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடடிவக்கை எடுக்க  கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

Tags : Closing Ceremony ,locations ,Virudhunagar , Peoples Pharmacy
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு