×

பட்டுபோன மரங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்: பராமரிப்பின்றி சேதமடைந்து வரும் அவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுபோன மரங்களில் பல லட்சம் மதிப்பில் செதுக்கப்பட்ட மர சிற்பங்கள் பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் வரும் 14 கி.மீ தொலைவு உள்ள பாதையில் பல வகையான 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது. இதில் சில மரங்கள் காய்ந்தும், பட்டுப்போயும் இருந்தது. அதைத்தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில் வேளாண் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் மற்றும் வனத்துறையினர் கிரிவலப்பாதையில் பட்டுபோன மரங்களை ஆய்வு செய்தனர். ஆய்வில், தண்டு துளைப்பான் பூச்சி இனத்தை சேர்ந்த வண்டுகள் தாக்கத்தினால் தான் மரங்கள் பட்டுப்போக காரணம் என கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், கிரிலப்பாதையில் பட்டுபோன நிலையில் இருந்த மரங்களை அகற்றாமல், மர சிற்பங்கள் செய்ய கலெக்டர் முடிவுசெய்து, மரச்சிற்பங்களை வடிவமைக்கும் பணியினை தொடங்க மகாபலிபுரத்தை சேர்ந்த மர சிற்பம் செய்யும் மதுரை மணிகண்டராஜ் என்பவரை தேர்வு செய்யப்பட்டது. சிற்பம் வடிவமைக்க ₹6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கிரிவலப்பாதையில் பட்டுபோன 62 மரங்களில் சிற்பம் வடிவமைக்க தரமான நிலையில் உள்ள 30 மரங்களில் மரச்சிற்பங்களை வடிவமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. பட்டுபோன மரங்களில் பறவைகள், முயல், மயில், முதலை, பட்டாம் பூச்சி, குதிரை, வாட்ச், செல்போன், டால்பீன், இந்தியா வரைபடம், இறகுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உருவங்களை வடிவமைத்து வருகின்றனர். இந்நிலையில், முதல் கட்டமாக சிற்பங்கள் வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்த மரங்கள், முறையாக பாதுகாப்பு மேற்கொள்ளப்படாமல், சிற்பங்கள் சேதமடைந்து வருகிறது. சூர்யலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம் அருகே வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் செல் அரித்தும், வண்டுகள் துளையிட்டும் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. சூர்ய லிங்கம் அருகே உள்ள மலர் சிற்பம் வண்டுகளால் சேதப்படுத்தப்பட்டு மரம் உதிர்ந்து வருகிறது. அதேபோல் அந்த மரத்தில் அடிப்பகுதியில் அரிக்கப்பட்டு வருகிறது. வருண லிங்கம் அருகே உள்ள சிற்பத்தில் செல்களால் அரிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மற்ற சில மர சிற்பங்களும் பராமரிக்கப்படாமல் சேதமடைந்து வருகிறது. கிரிவலப்பாதையில் பல லட்சம் செலவழித்து வடிவமைக்கப்பட்டு வரும் மர சிற்பங்களை, பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Tags : Thiruvannamalai , Thiruvannamalai, sculptures
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...