×

விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறி விபத்து: 3 பேர் பலி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறியதில் 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டிவனத்திலிருந்து சென்னை திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வாகனம் ஒன்று காலை 8 மணியளவில் வடவனூர் என்ற இடத்தில் சாலையோர பஞ்சர் கடையில் நின்றது. சரக்கு வாகனத்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் ரேடியேட்டர் பழுதடைந்து புகை கிளம்புவதால் தண்ணீர் கொடுக்குமாறு பஞ்சர் கடை உரிமையாளர் ஜனார்தனன் என்பவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோவின் பின்புறத்தில் தீப்பற்றி எரிவதை ஜனார்த்தனன் பார்த்துள்ளார். இதை தொடந்து வண்டியில் என்ன சரக்கு உள்ளது என்று கேட்டபோது பட்டாசு என்று ஓட்டுநர் கூறவே, பஞ்சர் கடை உரிமையாளரான ஜனார்த்தனன் தனது இருசக்கர வாகனத்தை சிறிது தூரத்தில் பாதுகாப்பாக வைப்பதற்காக எடுத்து சென்றபோது வண்டியில் உள்ள அனைத்து பட்டாசுகளும்  வெடித்து சிதறியது.

பட்டாசுகள் வெடித்ததில் சரக்கு வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த பட்டாசு வெடிப்பின் தாக்கத்தால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இருந்த கடைகள், வீடுகளில் கதவு ஜன்னல்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கின. அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைந்தது. தேனீர் கடை ஒன்று முற்றிலும் சிதைந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி சிதறி உயிரிழந்தனர். உடல் உறுப்புகள் ஆங்காங்கே சிதறி கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Viluppuram Villupuram Cargo ,fireworks explosion , Villupuram, Fireworks, Freight Vehicle, Explosion, Accident, 2 Kills
× RELATED விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச்...