×

நெல்லையில் 4 வழிச்சாலை பணிக்காக அகற்றப்படுகிறது: 11 மரங்கள் வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடப்படுகின்றன

நெல்லை: நெல்லையில் 4 வழிச்சாலை பணிக்காக 11 மரங்கள் வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். நெல்லை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பணியாக தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலும், பாளை மத்திய சிறையில் இருந்து டக்கரம்மாள்புரம் பகுதி வரையிலும் உள்ள சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகின்றன. இதற்கான பெரும்பாலான பணிகள் நிறைவு நிலையை எட்டியுள்ளன.

சாலையின் மையப்பகுதியில் நிரந்தர சிமென்ட் தடுப்புகள் மற்றும் இருபுறமும் ஒளிரும் மின்விளக்குகளும் அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தாழையூத்து - தச்சநல்லூர் சாலையில் இருபுறமும் ஆலமரம், புளியமரம், மருதமரம், வேப்பமரம் போன்ற வளர்ந்த மரங்கள் இருந்தன. இந்த மரங்களை சாலை விரிவாக்கப்பணிக்காக அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை வெட்டி அப்புறப்படுத்தாமல் ஆணி வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் வைத்து தொடர்ந்து வளர்க்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி இந்த சாலையில் 5 ஆலமரம், 2 புளியமரம், 2 மருதமரம், 2 வேப்பமரம் ஆகிய மரங்கள் ஆணி வேருடன் பிடுங்கப்படுகின்றன.

இவற்றில் இரண்டு மரங்களை விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் ஓரத்திலும் மற்ற 9 மரங்கள் ராஜவல்லிபுரம் குளக்கரை பகுதி சாலையோரம் நட நெல்லை நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதற்கான பணிகள் நேற்று துவங்கின. மரங்களை கிரேன் மூலம் அதன் வேரடி மண்ணையும் எடுத்துச் சென்று, ராஜவல்லிபுரம் அர்ஜூணன் குழுவினர் உதவியுடன் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

நெல்லை நெடுஞ்சாலைத்துறையினரின் இந்த புதிய முயற்சி இயற்கை ஆர்வலர்களை மகிழச் செய்துள்ளது. இதுபோல் சாலை விரிவாக்கம் செய்யும் எல்லா இடங்களிலும் வளர்ந்து நிற்கும் பசுமை மரங்களை வேரூடன் அகற்றி தொடர்ந்து வேறு இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : roads ,paddy field ,Nellai , Nellai, 4 way
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!