×

கடலாடி அருகே பரபரப்பு: அம்மன் கோயிலுக்கு வந்ததும் அருள்வந்து ஆடிய தாசில்தார்

சாயல்குடி: கடலாடி அருகே பிரச்னைக்குரிய அம்மன் கோயிலை திறக்கச் சென்ற தாசில்தார் திடீரென அருள் வந்து சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மேலக்கிடாரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள உய்வந்தம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறும். கடந்த 2012ல், முதல்மரியாதை பிரச்னை தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பிடம் கிராம வரிவசூல் செய்வதை மற்றொரு தரப்பினர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கோயில் பூட்டப்பட்டது. இதையடுத்து, ஒரு தரப்பினர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தலைமை ஏதும் இல்லாமல் திருவிழா கொண்டாட வேண்டும். கடலாடி தாசில்தார், முதுகுளத்தூர் சரக டிஎஸ்பி முன்னிலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல், கிராம மக்கள் ஒற்றுமையாக இருந்து சாமி கும்பிடவேண்டும் என வலியுறுத்தியது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, பூட்டிக் கிடந்த உய்வந்தம்மன் கோயிலின் கதவுகளைத் திறக்க கடலாடி தாசில்தார் முத்துக்குமார், வருவாய்துறை அலுவலர்களுடன் நேற்று பிற்பகல் சென்றார். அப்போது தாசில்தார் முத்துக்குமார் திடீரென அருள் வந்து சாமியாடினார். ‘நான் மாரியம்மன் வந்திருக்கேன்...’ என கூறிய அவர், மஞ்சள்பொடி கேட்டார். இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களும், அவருடன் சேர்ந்து சாமியாடினர். பிறகு செம்பு தண்ணீரில் மஞ்சள்பொடியை கலந்து, கோயில் வாசலில் தெளித்து, சூடம் காண்பித்து பூட்டியிருந்த கோயிலை தாசில்தார் முத்துக்குமார் திறந்தார்.இந்தச் சம்பவம் அங்கு சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : sea ,Arul , Dasildar, Arul
× RELATED அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்