×

மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்...அசோக் சவான் போகெர்வில் போட்டி

மும்பை: மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று  வருகிறது. இதற்கிடையே, மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இரு மாநிலங்களிலும் பிரதான  கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ.கவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றனர். காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றனர். இந்தநிலையில், காங்கிரஸ் முதல் கட்டமாக 51  தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் போகெர் தொகுதியிலும், நிதின் ரவுட் நாக்பூர் வடக்கு தொகுதியிலும் பரினிட்டி ஷிண்டே சோலாப்பூர்  தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராவியில் வர்ஷா ஏக்நாத் கெய்க்வாட்டும் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே, கூட்டணி பேச்சுவார்த்தையில் சிவசேனாவும், பா.ஜ.,வும் ஈடுபட்டுள்ளன. தொகுதிகள் பங்கீடு முடிவாகாத நிலையில், சிவசேனா கட்சிக்கு செல்வாக்கு அதிகமுள்ள, அக்கட்சி கேட்டு பெற்ற சில தொகுதிகளுக்கு, வேட்பாளர்  பட்டியலை சிவசேனா நேற்று வெளியிட்டது. சாவந்த்வாதி தொகுதியில் தீபக் கேசர்கர், கோலாப்பூர் தொகுதியில் ராகேஷ் சிரேஸ்கர் போட்டியிட உள்ளனர். உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே, மஹாராஷ்டிர சட்டசபை  தேர்தலில் சிவசேனா சார்பில் களமிறக்கப்பட உள்ளார். இதனை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும், அவரது மகன் உத்தவ் தாக்கரே தேர்தலில் போட்டியிடாமல், கட்சி  பொறுப்புகளை மட்டுமே வகித்து வந்த நிலையில், முதன் முறையாக அக்குடும்பத்திலிருந்து ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட உள்ளார்.

Tags : Maharashtra Assembly Elections ,Congress , Maharashtra Legislative Assembly, Constituency, Congress, Ashok Chavan Bokker
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...