×

கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் பொறியாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்: மின்வாரியம் உத்தரவு

சென்னை: கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் செயற்பொறியாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் வாரம்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது அந்த மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களை  சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொள்வார்கள். அதே போல துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள். அவ்வாறு பங்கேற்றவுடன், தங்களது பகுதியில் விவசாயம் செய்வதில் உள்ள பிரச்னைகள் பற்றி கூறுவார்கள். குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு, விதை நெல் பிரச்னை, நெற்பயிர்களை தாக்கும் நோய்கள், மின்தடை உள்ளிட்ட பிரச்னைகளை பற்றி  கூறுவார்கள்.
அப்போது சம்மந்தப்பட்டத்துறையை சேர்ந்த அதிகாரிகள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வருங்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டரிடத்தில் தெரிவிப்பார்கள். இந்த நடைமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.  

இந்நிலையில் ஒருசில பகுதிகளில் மின்வாரிய செயற்பொறியாளர்கள் கலந்து கொள்வதில் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவர்களுக்கு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகங்களில் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் வருகிறார்கள். அவர்கள் கோரிக்கை சம்பந்தமாக பதில் அளிக்க வேண்டியுள்ளது. ஆகவே செயற்பொறியாளர்கள்  அனைவரும் கண்டிப்பாக தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் வட்டாச்சியர் தலைமையில் தாலுக்கா அளவில் நடக்கும் கூட்டத்துக்கு  உதவி செயற்ெபாறியாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


Tags : Engineers ,meetings ,office ,Collector , Collector's Office, Engineers ,regular, Power Directive
× RELATED Patient Care System’ - கொரோனா நோயாளிகளுக்கு உதவ...