×

கோச்சிங் மையங்கள்தான் மோசடிக்கு முக்கிய காரணம்: ராமலிங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு சங்க கூட்டமைப்பு செயலாளர்

மாநில அரசின் பாடத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு நீட் என்கிற பெயரில் போட்டி தேர்வு நடத்துகிறார்கள். இந்த தேர்வை வேண்டாம் என்று எதிர்த்ேதாம். ஆனால், அதையும் மீறி நீட் தேர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தகுதி,  திறமை என்று சொல்லி திசை திருப்பும் முயற்சி தான் இந்த நீட் தேர்வு. எல்லா பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும் என்று நினைப்பதால் நடக்கும் விளைவுகளைத்தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். மருத்துவம் தவிர பல படிப்புகள் உள்ளது. ஆனால், அந்த படிப்புகளில் தங்களது  பிள்ளைகளை சேர்க்காமல் அனைவரும் மருத்துவம் படிக்க வைக்க நினைக்கின்றனர். இப்போது சிக்கியுள்ள ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் வெங்கடேசன்  சின்சியராக இருப்பார். தனது பையனை டாக்டராக்க வேண்டும் என்று இப்படி செய்து  விட்டார். அவர் எங்களது துறையில் பையனை கொண்டு வர வேண்டும் என்று எண்ணியுள்ளார். தற்போது, இந்த ஆள்மாறாட்டம் விவகாரம் விசாரணையில் உள்ளது. இப்போது நடக்கும் விசாரணையை பார்த்தால் இடைதரகர் கேரளாவில்  இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நீட் ஆள்மாறாட்டம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க நடந்து இருக்க வாய்ப்புள்ளது. இன்னும் விசாரணை நடந்த பின்னர், முழுமையாக  என்ன நடந்தது என்பது தெரிய வரும்.

2 வருடங்களுக்கு மேலாகவே இந்த ஆள்மாறாட்டம் நடந்து வந்து இருக்கலாம்.  தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைகளுக்கு தமிழகத்தில் சென்டர் கிடைப்பதில்லை. தமிழகத்தில் தேர்வு எழுத சென்றவர்களிடம் பல கெடுபிடிகள் காட்டினார்கள். கம்மல்,  கொலுசு போடக்கூடாது என்றார்கள். முழுக்கை சட்டை அணியத்தடை என்றார்கள். இப்படி கெடுபிடி செய்வது போன்று நடந்து விட்டு, இப்ேபாது தேர்வு எழுத ேவறொரு ஆளையே விட்டு விட்டனர். இதை எப்படி தடுக்க வேண்டும் என்பதை  பார்க்க வேண்டும். பயோ மெட்ரிக் சிஸ்டத்தை கொண்டு வந்த இந்த சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும். நீட் தேர்வு வைத்து தான் எம்பிபிஎஸ் சீட் தர வேண்டும் என்கின்றனர். அப்படியெனில் ஒவ்வொரு மாணவர்களும் பிளஸ் 2  எதற்காக படிக்கிறார்கள்?
எனவே, பிளஸ் 2 மதிப்பெண்ணையும் நீட் தேர்வு எழுதிய பின்னர் வரும் மார்க்கையும் கணக்கில் வைத்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அனைத்து தரப்பினருக்கும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும். நீட் தேர்வு தொடர்ந்தால் 8ம் வகுப்பில் இருந்து கோச்சிங் வகுப்பு கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். கோச்சிங் மையம் தான் மோசடிக்கு காரணமாக இருந்துள்ளது. ஐஐடியில் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சேருவது கடினம்.  ஐஐடியில் எப்படி கோச்சிங் வகுப்புக்கு சென்று சேருகிறார்களோ, அது மாதிரியான நிலையை மருத்துவத்துறையிலும் அப்படி ஆக்குகின்றனர். இது போன்ற நிலைவந்தால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் மருத்துவர் ஆக முடியாது.  அவர்களது வாய்ப்புகள் பறி போய் விடுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்றால் கோச்சிங் சென்டர்களுக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுகிறது. அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கோச்சிங் சென்டரில் சேர்க்கின்றனர்.  அவ்வாறு கோச்சிங் சென்டர் மூலம் படித்து தேர்ச்சி பெறுபவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனையில் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

தற்போது தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு நன்றாக உள்ளது. அதை கெடுக்கவே இந்த நீட் தேர்வு ஒரு காரணமாக அமையப்போகிறது. மத்திய அரசாங்கம் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை கட்டாயம் மூட முயற்சி செய்வார்கள். நீட் தேர்வில்  நடைபெறும் முறைகேடு புகார் வெளியில் வந்து கொண்டிருந்தால் மக்கள் மனநிலை மாறி விடுமோ என்ற எண்ணம் உள்ளது. அப்படி செய்தால் ஆள்மாறாட்ட மோசடி நடந்து கொண்டே தான் இருக்கும். இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட நீட்  தேர்வு என்பது கூடவே கூடாது. கோச்சிங் சென்டர் மூலம் படித்து தேர்ச்சி பெறுபவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனையில் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

Tags : Ramalingam ,coaching centers ,Professors Association ,Association of Government Doctors ,Association of Graduate Programs ,Doctors ,Government , Coaching centers,fraud, Ramalingam, government,Graduate Programs
× RELATED புதுக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு...