×

குரூப் 2 பாடம் திட்டம் மாற்றத்தால் கிராமப்புற, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூட்டாக பேட்டி

சென்னை: கிராமப்புற மாணவர்கள், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாடம் திட்டம் மாற்றத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:குரூப் 2  மற்றும் 2ஏ பணிகளுக்கும் ஒரே தேர்வாக முதனிலை மற்றும் முதன்மை எழுத்து தேர்வு கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் குரூப் 2, குரூப் 2ஏ முதனிலை தேர்வில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ்  அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தது. தேர்வு எழுதுபவர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தேர்வு பெற முடியும் என்ற நிலை இருந்தது. அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இந்த தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை  இருந்தது. இதனால் தான் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதனிலை   தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மை எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக தமிழக வரலாறு, தமிழ்  மொழியையும் அறிந்தவராகவும், தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

இதனால் முதன்மை தேர்வில், தமிழ்  ஆங்கிலம் மொழி பெயர்ப்பு; ஆங்கிலம்-தமிழ்  மொழிபெயர்ப்பு, சுருக்கி வரைதல், கட்டுரை எழுதுதல், குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல், திருக்குறள் பற்றி கட்டுரை, அலுவலகக் கடிதம் எழுதுதல்  ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.கிராமப்புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாடம் திட்டம் மாற்றத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நன்மை தான் ஏற்படும். மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்த பாடத்திட்டமே தற்போது புதிய  பாடத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு என்று தனியாக தேர்வாகும் நிலை இனி இருக்காது. இந்த புதிய முறையால் தமிழ் எழுத, படிக்க தெரியாதவர்கள் இனி தேர்ச்சி பெற முடியாது. புதிய பாடத்திட்டம் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுபவர்கள் தயாராக போதிய கால அவகாசம் வழங்கப்படும்.2019ம் ஆண்டுக்கான கால அட்டவணையில் 2 தேர்வுகள் மட்டுமே நடத்த வேண்டியது உள்ளது. அது இன்னும் 2 மாதத்தில் நடத்தப்படும். 2019ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகள் மூலம் 17,500 பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். அடுத்த  ஆண்டுக்கான கால அட்டவணை இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். அண்மையில் நடந்த குரூப் 4 தேர்வில் 3 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது தொடர்பாக வல்லூனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வல்லூனர் குழு அறிக்கைக்கு பிறகே  ரிசல்ட் வெளியிடப்படும். பழைய பாடத்திட்டத்தையை தொடர வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் அது குறித்து பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : DNBSC ,Group 2 , Group 2, lesson plan , Tamil ,students, jointly
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவி...