×

விவரம் இல்லாமல் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதைவிட விவரத்தோடு பேச முதல்வர் முயல வேண்டும்: துரைமுருகன் அறிக்கை

சென்னை: விவரம் இல்லாமல் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதைவிட விவரத்தோடு   பேச  முதலமைச்சர்  முயல வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபகாலமாக ஒரு வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். எந்த ஊருக்கு போனாலும், எந்த விழாவில் உரையாற்றினாலும், திமுக ஆட்சியில் காவிரி-முல்லைப் பெரியாறு பிரச்னையில் என்ன செய்தது என்று  கேட்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் எத்தனையோ முறை முதலமைச்சரும்-மற்ற அமைச்சர்களும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டபோதெல்லாம், நாங்கள் பலமுறை விவரமாக கூறி எங்களுக்கே அலுத்துபோய்விட்டது.  அவர்களுக்கும் கேட்டு, கேட்டு காதுகளும்  மரத்துப் போயிருக்கும்.
ஆனாலும், முதல்வர் எடப்பாடி, விழாக்கள் தோறும் இதே கேள்வியை கேட்டு வருகிறார். அப்படித்தான் நேற்று முன்தினம் சேலம் வீரபாண்டி தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதும், “தமிழக பொதுப்பணித்  துறை அமைச்சராக அதிக காலம் இருந்தவர், எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன்.  காவிரி-முல்லைப் பெரியாறு-பாலாறு பிரச்னைகளுககு எந்த தீர்வும் காணாதவர்” என்று பேசியிருக்கிறார்.  அதாவது, கலைஞர் அரசு இந்தப்  பிரச்னைகளில் எதுவும் செய்யவில்லை என்கிறார்.
காவிரி பிரச்னைக்கோர் தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக எழுப்பியவர், அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் தான்.  சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாக இதைக் கொண்டு வந்ததும்  கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான். காவேரியில் மொத்தம் எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை கண்டுபிடிக்க ‘உண்மை கண்டறியும் குழு’வை கொண்டு வந்தவரும் கலைஞர் தான். காவேரி நடுவர் மன்றத்தில் இறுதித் தீர்ப்பை  பெற்றதும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான்.

இறுதித்  தீர்ப்பில்  கூறப்பட்டுள்ள 192 டி.எம்.சி. தண்ணீரைவிட மேலும், 60 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என கேட்டவர் கலைஞர்.  ஆனால், இருப்பதில்  பெற்ற 192 டி.எம்.சி-யிலேயே 4.75 டி.எம்.சி. தண்ணீரை இழந்துவிட்டு நிற்பவர்  இன்றைய  பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெற்றுத்தர வித்திட்டது திமுக அரசுதான்.இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பொதுப்பணித் துறையில் மின்னல் வேகத்தில் முதல்வர் எடப்பாடி பணியாற்றுவதை போலவும் நினைத்து கொண்டு மற்றவரை குறை சொல்லி வருகிறார். அவர் மின்னல் வேகத்திற்கு இதோ ஓர் உதாரணம். 2013-14ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரையிலான இந்த ஆறு ஆண்டில் பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்ட பணம், பாசனத்திற்கென மொத்த ஒதுக்கீடு 13,606 கோடி ரூபாய்.   ஆனால்,மொத்தம் செலவு செய்ததோ 6,973 கோடி ரூபாய்தான். இதை நான் குற்றமாக சொல்லவில்லை.  2018ம் ஆண்டை தணிக்கை செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின் அறிக்கை - 2019ல் தெளிவாக  தெரிவித்திருக்கிறது. இதையெல்லாம் படித்துவிட்டு அவர் பேசுவது நல்லது. விவரம் இல்லாமல் பேசி; வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதைவிட விவரத்தோடு பேச முதல்வர்  முயல வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறையில் மின்னல் வேகத்தில் முதல்வர் எடப்பாடி பணியாற்றுவதை போலவும் நினைத்து கொண்டு மற்றவரை குறை சொல்லி வருகிறார்.

Tags : chief minister ,Duraimurugan ,villain , Speaking ,detail,villain, detail, Duraimurugan
× RELATED முதல்வர், துணை முதல்வர் ஜனாதிபதியை வரவேற்றனர்