×

அம்பத்தூர் மங்களாபுரத்தில் பராமரிப்பில்லாத கால்வாய்களில் கழிவுநீர் தேக்கம்: கொசுக்களால் நோய் தொற்று அபாயம்

அம்பத்தூர்: சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், 85வது வார்டில் மங்களபுரம் உள்ளது. இங்கு 600க்கும் மேற்பட்ட வீடுகளில் 2000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு குள்ளன் தெரு, பஜனை கோயில் தெரு, பாடசாலை தெரு, நல்ல கிணறு தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. மேற்கண்ட தெருக்களில் அம்பத்தூர் நகராட்சியாக இருந்த ஆரம்ப காலகட்டத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 8 ஆண்டாக மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “மங்களபுரத்தில் உள்ள அனைத்து கால்வாய்கள் பல இடங்களில் உடைந்து கிடக்கின்றன. மேலும், இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முடிந்தும் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு தரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சலுக்கு இப்பகுதி மக்கள் ஆளாகின்றனர்..

மேலும், சமீபத்தில் தான் மேற்கண்ட பகுதியில் புதிதாக சாலை அமைத்தனர். அப்போது, அங்கு சேதமடைந்து இருக்கும் கால்வாய்களை சீரமைக்கவில்லை. புதிதாக போடப்பட்ட சாலையும் தரமானதாக போடவில்லை. குறிப்பாக, சிறுமழை பெய்தால் கூட, தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாது. மேலும், தண்ணீர் சாலையிலேயே தேங்கி நிற்கும். இதோடு மட்டுமல்லாமல், பாதாள சாக்கடை திட்டம் முடிந்தும் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்காமல் உள்ளது. மேலும், அங்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் போது புதியதாக போட்ட சாலையை தோண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், தற்போது பல லட்சம் செலவில் போடப்படும் சாலை வீணாகி போய் விடும் நிலை உள்ளது.  எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மழை காலத்திற்கு முன்பு மங்களபுரத்தில் உடைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவும், புதிதாக போடப்பட்ட சாலையின் தரத்தை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.    

நடவடிக்கை இல்லை

மங்களபுரத்தில் உள்ள பொது கழிப்பிடத்தில் உள்ள செப்டிக் டேங்க் நிறைந்து பல மாதங்களாகி விட்டது. இதில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்ததாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்திட முடியவில்லை. மேலும், இவர்கள் திறந்த வெளியில் தான் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags : canals ,Ambattur Mangalore ,mosquitoes , Sewage treatment, unmanaged canals,Ambattur Mangalore,Risk of infection,mosquitoes
× RELATED கால்வாய்கள், நீர்நிலைகளில் டிரோன்கள்...