×

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் தங்க, வைர நகைகள் பறிமுதல்: தப்பிய ஆசாமிக்கு வலை

மீனம்பாக்கம்: தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹15 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகள் குடியுரிமை சோதனை மற்றும் சுங்க சோதனையை முடித்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியில் சென்றனர். வழக்கமாக அந்த விமானம் அதிகாலை 5.15 மணிக்கு தான் வரவேண்டும். ஆனால், 45 நிமிடம் முன்னதாகவே வந்துவிட்டது. அவ்வாறு வரும் விமானம் மீண்டும் 7.15 மணிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு உள்நாட்டு விமானமாக புறப்பட்டுச் செல்லும்.
அதற்கு முன்பாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் பணியாளர்கள் அந்த விமானத்திற்குள் ஏறி சுத்தப்படுத்தினர். அப்போது, பயணிகள் அமரும் இருக்கை ஒன்று வழகத்திற்கு மாறாக பெரியதாக இருந்தது. அதனை ஊழியர் சரி செய்ய முயன்றபோது அதில் நீள நிற பவுச் ஒன்று மறைத்து வைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதுபற்றி இண்டிகோ ஊழியர்கள் உடனடியாக மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து அதை திறந்து பார்த்தனர். அதில், சிறு சிறு தங்க நகைகள், மோதிரங்கள், கம்மல், செயின்களில் அணியும் டாலர்கள், மூக்குத்திகள் மற்றும் சிறு தங்க கம்பிகள் இருந்தன. அந்த தங்க நகைகளில் வைர கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அதன் மொத்த எடை 370 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ₹15 லட்சம். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விமான நிலையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் மற்றும் விமான வருகைப் பகுதியில் உள்ள கேமரா காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 அந்த விமானம் வழக்கமாக வரும் நேரத்தைவிட முன்னதாகவே வந்து விட்டதால் கடத்தல் ஆசாமியிடம் இருந்து தங்க வைர நகைகள் அடங்கிய பவுச்சை சுங்க சோதனை இல்லாமல் வெளியில் கொண்டு போக விமான நிலைய ஊழியர்கள் யாராவது உதவி செய்வதாக கூறியிருக்கலாம். ஆனால் விமானம் முன்னதாக வந்துவிட்டதால் உதவி செய்வதாக கூறிய ஆசாமி வரமால் இருக்கலாம். எனவே கடத்தல் ஆசாமி, வேறு வழியின்றி பவுச்சை விமான இருக்கைக்கு கிழே மறைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இல்லையென்றால் சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் மீண்டும் புறப்பட்டுச் செல்லும்போது கடத்தல் ஆசாமி, இதே விமானத்தில் மும்பைக்கு செல்லுவதைப்போல் இந்த நகைகள அடங்கிய பவுச்சை வெளியில் எடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Thailand ,jewelery , Rs 15 lakh gold, diamond ,jewelery ,seized , Thailand
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...