×

கிடப்பில் புழல் ஏரி உபரிநீர் கால்வாய் சீரமைப்பு பணி குடியிருப்புகளை வெள்ளம் சூழும் அபாயம்: பொதுப்பணித்துறை மெத்தனம்

திருவொற்றியூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலையாக புழல் ஏரி விளங்குகிறது. மழைக்காலத்தில் செங்குன்றம், புழல், பம்மதுகுளம், ஒரகடம், அம்பத்தூர், திருமுல்லைவாயல் போன்ற பல பகுதியில் இருந்து வரும் மழைநீர்  புழல் ஏரியில் தேங்கும். அதிக மழை பெய்யும்போது புழல் ஏரி நிரம்பினால், மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும். இந்த உபரிநீர் கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம், ஆமுல்லைவாயல், சடையன்குப்பம் ஆகிய பகுதிகளை கடந்து கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவார ஆற்றில் கலக்கும். இந்நிலையில் இந்த உபரிநீர் கால்வாய் பல இடங்களில் ஆகாயத்தாமரை வளர்ந்தும் சேறும் சகதியுமாக உள்ளது. மேலும், இந்த கால்வாயின் கரைகள் பல இடங்களில் பழுதாகி உள்ளது. குறிப்பாக மணலி  ஆமுல்லைவாயல் பகுதியில் இந்த கால்வாய்  சேறும் சகதியுமாக தூர்ந்து இருப்பதோடு ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால்  மழைக்காலத்தில் புழல் ஏரியில் இருந்து  வரும் உபரிநீர் இந்த  கால்வாயில் இருந்து வெளியேறி அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் புகும் அபாயம் உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பெய்த பெரு மழையின் போது இந்த உபரிநீர் கால்வாய் தூர்ந்து, கரைகள் பழுதடைந்து இருந்ததால் உபரிநீர் வெளியேறி சுற்றுப்பகுதி கிராமங்களில்  புகுந்து  ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கி, பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எனவே உடனடியாக இந்த கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பொதுப்பணி துறையின் மூலம் பல கோடி ரூபாய் செலவில் புழல் ஏரியில் இருந்து முல்லைவாயில் தரைப்பாலம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த உபரிநீர் கால்வாயை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த அரசு  திட்டமிட்டு, சில மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டது. ஆனால்  பணியை துரிதமாக செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர். இதனால் மழை காலத்தில்  புழல் ஏரியில் இருந்து வரக்கூடிய  உபரிநீர்  கால்வாயில் இருந்து வெளியேறி, ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த பணியை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை வேண்டும்,’’ என்றனர்.   

உயர்மட்ட பாலம் அவசியம்
 மணலி ஆமுல்லைவாயல்   தரைப்பாலத்தை கடந்து தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.  இந்த பாலத்தில் கைப்பிடி உடைந்து பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் தவறி கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. மேலும் அதிக மழை காலத்தில் உபரி நீரை பாலத்தின் மேலே பெருக்கெடுத்து ஓடும். அப்போது அந்த வழியாக போக்குவரத்து தடைபடும். கடந்த 2015ம் ஆண்டு பெய்த பெருமழையில் இந்த தரைப்பாலத்தை கடக்க முயன்ற 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். எனவே, இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : flooding ,lagoon lake drainage workshops ,water canal , Risk , flooding , dilapidated, Lake Survey water canal works,Public Works
× RELATED காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய் ₹40...