தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்கே உணர்த்தலாம்: ப.சிதம்பரம் டிவிட்

புதுடெல்லி: ‘தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், நம் மொழியின் சிறப்பையும், கலாச்சாரத்தையும் அனைவருக்கும் உணர்த்தலாம்,’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியாவில் பல்வேறு சமூகங்கள் ஜனநாயகத்துடனும், சுதந்திரமாகவும் இருக்கின்றன என்பதற்கு முக்கிய சான்றே, அங்கு பேசப்படும் பலதரப்பட்ட மொழிகள் தான்,’ என்றார். மேலும், ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய அவர், சங்க காலப் புலவர் கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ தத்துவத்தை குறிப்பிட்டு தமிழ் மொழியை பெருமைப்படுத்தினார்.

ஆனால் நாடு முழுவதும் இந்தியை தேசிய மொழியாக கொண்டு வர வேண்டுமென்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டுமென வலியுறுத்தி பேசியது கடும் சர்ச்சையானது.இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலமாக டிவிட்டரில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அதுபோல் நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தமிழ் மக்கள் ஒன்றுபட்டு, ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் சிறப்பை பற்றியும், நம் கலாச்சாரத்தின் பெருமை குறித்தும் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் உணர்த்தலாம்,’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: