×

புதிய வழியில் போதைக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவே இ-சிகரெட்டுக்கு தடை: மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: ‘‘இளைஞர்கள் நாகரீகம் என்ற புதிய பாதையில் போதைக்கு அடிமையாவதை தடுக்கவே இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டது,’’ என ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு  மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவர் நேற்று தனது ‘மன் கி பாத்’ உரையில் பேசியதாவது:தீபாவளியானது, கடவுள் லட்சுமியை நம் வீட்டுக்கு வரவேற்பதற்கான பண்டிகையாகும். நம்முடைய கலாச்சாரத்தில் நம் மகள்களையும் லட்சுமியாகத்தான் பாவிக்கிறோம். சமூகத்தில் இன்று பல மகள்களும், மருமகள்களும் சிறப்பான பணிகளை செய்து வருகின்றனர். அது போல், நாடு முழுவதும் உள்ள மகள்களை அடையாளம் கண்டு இச்சமூகம் பெருமைப்படுத்த வேண்டும்.  

பண்டிகையின் போது நமக்கு இனிப்புகள், ஆபரணங்கள், பரிசுகள் கிடைப்பதைப் போல நாமும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் அதிகப்படியாக, தேவையில்லாமல் உள்ளவற்றை இல்லாதவர்களிடம் கொடுத்து உதவுங்கள்.  இன்றைய காலகட்டத்தில் இ-சிகரெட் குறித்த தவறான சில பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் உடலுக்கு தீங்கிழைக்கும் எந்த ரசாயனமும் இல்லை என கூறப்படுவது முக்கியமானது.
உண்மையிலேயே, இ-சிகரெட்டில் உடலுக்கு தீங்கிழைக்கும் பல்வேறு ரசாயன பொருட்கள் உள்ளன. ‘நாகரீகம்’ என்ற பெயரில் இளைஞர்கள் போதையின் புதிய பாதையான இ-சிகரெட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். அதனை தடுக்கவே இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இணைந்து ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரஷ்ய டென்னிஸ் வீரருக்கு பாராட்டு

யு.எஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலிடம் தோற்ற ரஷ்ய வீரர் மெட்வதேவின் பணிவும், விளையாட்டின் மீதான உத்வேகமும் தன்னை கலங்க வைத்ததாக பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். அவர் பேசுகையில், ‘‘போராடி அடையும் தோல்வி, யாரையும் வருத்தத்திற்கும், விரக்திக்கும் உள்ளாக்கும். ஆனால், ரஷ்ய இளம் வீரர் மெட்வதேவ் முகத்தில் அதற்கான சிறிய அறிகுறி கூட இல்லை. தோற்ற பிறகும் அவரது முகத்தில் இருந்த புன்னகை பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்தது. போராடி தோற்றாலும் அவர் மக்களின் இதயங்களை வென்றுவிட்டார். தோல்விக்கு பிறகான அவரது பேச்சிலிருந்த பணிவும், விளையாட்டின் மீதான உத்வேகமும் கலங்க வைத்தது,’’ என்றார்.

லதா மங்கேஷ்கருடன் போனில் பேசிய மோடி
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று முன்தினம் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். அமெரிக்க பயணம் காரணமாக பிரதமர் மோடி முன்கூட்டியே தொலைபேசி வாயிலாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த உரையாடல், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது. அதில், பிரதமர் மோடி, ‘‘நீங்கள் பூரண உடல் நலத்துடன் இருக்க வேண்டும், உங்கள் ஆசி தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும்,’’ என்றார். பிரதமரின் அழைப்புக்காக மகிழ்ச்சி தெரிவித்த லதா மங்கேஷ்கர் தனக்கு ஆசி கூற கேட்டுக் கொண்டார். அதற்கு மோடி, ‘‘வயதில் நீங்கள் பெரியவர். நீங்கள்தான் எங்களுக்கு ஆசி கூற வேண்டும்’’ என்றார்.

அதற்கு மங்கேஷ்கர், ‘‘நம்மை விட வயதில் பெரியவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால், சிறந்த சேவையாற்றுபவர்களின் ஆசிதான் முக்கியம்’’ என்றார். மேலும், பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு நம் நாட்டின் மீதான மதிப்பு அதிகரித்து வருவதாகவும் லதா மங்கேஷ்கர் பாராட்டு தெரிவித்தார். ‘‘பல சாதனைகள் புரிந்தபோதிலும், பணிவுடன் நடந்து கொள்ளும் உங்கள் குணமே எங்களை மிகவும் கவர்ந்திருக்கிறது’’ என்றார் மோடி.

‘சாதிக்கும் மகள்களை ஹேஷ்டாக் செய்யுங்கள்’
மோடி பேசுகையில், ‘‘சாதனை படைத்த நமது மகள்களையும், மருமகள்களையும் பெருமைப்படுத்த. #BharatkiLakshmi’ என்ற ஹேஷ்டாக் மூலம் உங்கள் சாதனை மகள்களுடன் செல்பி எடுத்து டிவிட்டரில் வெளியிடுங்கள். நம் பாரதத்தின் லட்சுமிகளை ஊக்கப்படுத்துவது, நாட்டையும், நாட்டு மக்களின் வெற்றிப் பாதையையும் வலுப்படுத்துவதாகும்,’’ என்றார்.

Tags : E-cigarette ,ban,stop youth addiction,new way,PM Modi address
× RELATED ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து...