×

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று கோலாகல துவக்கம்: 8ம்தேதி மகிஷாசூரசம்ஹாரம்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 8ம்தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. மைசூருக்கு அடுத்தப்படியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று (29ம்தேதி) அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 7.45 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. அதனைத்தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருக்காப்பு அணிந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றிரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் பரதநாட்டியம், சமயசொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி, பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 6ம் நாளான 4ம்தேதி இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 10ம் நாளான 8ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் வாகனத்தில் கடற்கரை சிதம்பேரஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி ‘‘மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தல்’’ நடக்கிறது. 9ம்தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்ததும் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனை, 2 மணிக்கு அம்மன், சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனை, 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனை முடிந்து திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதல் நடைபெறுகிறது.

அதன்பிறகு காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதியுலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோயில் வந்து சேர்தல், 4.30 மணிக்கு காப்புகளைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் ஆகியவை நடக்கிறது. 12ம் திருநாளான 10ம்தேதி காலை 6 மணி, 8 மணிக்கு அபிஷேக ஆராதனைகள், மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல்அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Kulasekaranpattinam Mutharamman Temple Dussehra Festival ,Kulasekaranpattinam Mutharamman Temple Dasara Festival , Kulasekaranpattinam, Mutharamman Temple, Dasara Festival
× RELATED ‘ஓம்காளி ஜெய்காளி’ பக்தி கோஷங்கள்...